தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்தினால் புதியதொரு நிபந்தனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கான வேலைநாட்களைக் குறைக்கும் இந்த நிபந்தனையை, தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று கூறிய தொழிற்சங்கங்கள், இன்று வௌ்ளிக்கிழமை (14), கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்படுவதென்பது சாத்தியப்படாது எனவும் சுட்டிக்காட்டின.
ஆரம்பத்தில், 3 நாட்கள் மாத்திரமே, அடிப்படைச் சம்பளத்துடன் வேலை வழங்குவோம் என்று கூறி வந்த முதலாளிமார் சம்மேளனமானது, தற்போது, 250 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுமெனவும் அதனை, கூட்டொப்பந்தத்தில் புதிய நிபந்தனையாக உள்ளடக்குமாறும் வலியுறுத்தின.
“இவ்விடயத்தை உள்ளடக்கிய மின்னஞ்சலொன்று, கடந்த புதன்கிழமையன்று, முதலாளிமார் சம்மேளனத்தினால், தொழிற்சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்துப் பார்த்த தொழிற்சங்கங்கள், இந்தப் புதிய நிபந்தனையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என, தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம், புதனன்றே அறிவித்துவிட்டன.
கடந்த 18 மாதங்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பான கூட்டொப்பந்த விவகாரம், நாளையுடன் முடிவுக்கு வருமா? என்று, பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.இராமநாதனிடம் தொடர்புகொண்டு கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், “கூட்டொப்பந்தத்தில், தோட்டத் தொழிலாளர்களுக்கு 300 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த முறைமையை மாற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலாளிமார் சம்மேளனம், 250 நாட்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தை, கூட்டொப்பந்தத்தில் உள்ளடக்குமாறு வலியுறுத்துகின்றது” என்றார்.
“தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தப் புதிய முறைமையை, எந்த வகையிலும் தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
மூன்று நாட்களுக்கு மட்டுமே 730 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமெனவும் மீதமுள்ள நாட்களுக்கு தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுமெனவும் முதலாளிமார் சம்மேளனம் கடந்த 18 மாதங்களாக கூறிவந்தது.
இதனை தொழிற்சங்கங்கள் மறுத்ததன் காரணமாக, தற்போது குறுக்கு வழியை கையாண்டு 250 என்ற நாட்கணக்கை முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களுக்கு முற்கொடுப்பனவுடன் கூடிய 17 நாட்கள் விடுமுறை மற்றும் 3 பொது விடுமுறைகளை உள்ளடக்கும்போது, வருடத்தில் 20 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகின்றது.
முதலாளிமார் சந்மேளனத்தின் புதிய நிபந்தனைப் பற்றி சிந்திப்போமாயின், 250 நாட்களுக்கான வேலையிலிருந்து 20 நாட்கள் விடுமுறையைக் கழித்தால், 230 நாட்கள் மாத்திரமே, அவர்கள் வேலை செய்ய நேரிடும். இவ்வாறு, 230 நாட்களுக்கு வேலை வழங்கப்படுமென்றால், தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவர்.
எனவே, 250 நாட்கள் விடுமுறையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என அவர் கூறினார்.
“முதலாளிமார் சம்மேளனம், இவ்விடயத்தை தொடர்ந்து வலியுறுத்துமானால், கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, கூட்டொப்பந்தத்தில் கைச்சாத்திடும் முக்கிய தொழிற்சங்கமொன்றின் பொதுச் செயலாளர், வெளிநாடொன்றுக்கு பயணமாகியுள்ளதால், இன்று கைச்சாத்திட எதிர்ப்பார்த்திருந்த கூட்டொப்பந்தம், கைச்சாத்திடப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பலகாலமாக, சம்பள அதிகரிப்பு விடயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கொந்தளித்துள்ள மலையக மக்கள், கடந்த இரண்டு வாரங்களாக, நாடளாவிய ரீதியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்ததுடன், இவ்வாரமும் மலையகத்தின் சில இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர் வீதிமறியல் போராட்டங்களால், மலையகத்தின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் துறைக்கு பாரிய நட்டமேற்பட்டுள்ளது. குறிப்பாக பெருந்தோட்டத்துறை, அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும், பல மில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டுள்ளது.
இவ்வாரமும், மலையகத்தின் சில பகுதிகளில், தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பொகவந்தலாவை, ஹட்டன், மஸ்கெலியா, இரத்தினபுரி, வெலிமடை, கேகாலைக்கு உட்பட்ட 22 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், போராட்டங்களில் பணிப் பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வடக்கு, கிழக்கு, கொழும்பு உள்ளிட்ட மாட்டவங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொறுமையிழந்துள்ளத் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கு வழங்கி வரும் சந்தப்பாணத்தை நிறுத்தப்போவதாக கடுந்தொனியில் கூறியுள்ளதுடன், வாக்குறுதி வழங்கியதைப் போன்று 1000 ரூபாய் சம்பளத்துடன், ஆறு நாட்களுக்கான வேலையை வழங்குமாறும் கோஷமெழுப்பி வருகின்றனர்.