(க. அகரன்)
“வவுனியா மாவட்டத்திலுள்ள பேயாடி கூழாங்குளம் கிராமத்திலுள்ள பொதுமக்களின் காணிகளை இராணுவத்தேவைக்காக சுவீகரிப்பதை உடனடியாக நிறுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறு” மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதமொன்றை இன்று (28) அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், வவுனியா நகரத்திலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் ஏ-9 வீதியில் அமைந்துள்ள பழைய கிராமம் பேயாடிகூழாங்குளம் ஆகும். இங்கு பாடசாலை, பிரதேச சபையின் உப அலுவலகம், பொது நோக்கு மண்டபம், கடைத்தொகுதி, மத தலங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் இருந்தன.
1990ஆம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின் போது மேற்படி கிராமத்திலிருந்த மக்கள் இடம்பெயர்ந்ததை தொடர்ந்து இராணுவத்தினரால் இங்கு முகாம் அமைக்கப்பட்டு தற்போது 56ஆவது பிறிகேட் இராணுவத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 30.09.2014 திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் இராணுவத்தேவைக்காக காணிகளை சுவிகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதுடன் 11 குடும்பங்களுக்கான 8.3 ஹெக்ரேயர் காணி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக மேற்படி முகாமைச்சூழவுள்ள மேலும் 5.96 ஹெக்ரேயர் காணியை சுவீகரிப்பதற்கான முனைப்புகளை இராணுவத்தினர் ஆரம்பித்துள்ளதாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தற்போது படிப்படியாக விடுவிக்கப்படுகின்ற நிலையில் வவுனியாவில் புதிதாக காணிகள் சுவீகரிக்க முயற்சிப்பதானது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளமுடியாததாகும்.
எனவே பாரம்பரிய கிராமமான பேயாடிகூழாங்குளத்தில் இராணுவத்தினரால் பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பொதுமக்களிடம் மீளஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தங்களை தயவாக கேட்டுக்கொள்கின்றேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.