ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்கக் கோரியும் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலும், நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கைப் பிரேரணை வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கலந்துகொள்ள வேண்டாமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், நேற்று (12) காலை, முக்கிய சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே, ஜனாதிபதி மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார். எனினும், ஜனாதிபதியின் கோரிக்கையை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அடியோடு நிராகரித்துள்ளனர்.
“ஐக்கிய தேசிய முன்னணி, பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கும் நபரையே தாம் ஆதரிக்கத் தீர்மானித்துள்ள்ளதாகவும் என்று கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டு ஏற்கனவே தங்களிடம் கடிதம் ஒன்றை ஒப்படைத்திருந்தோம். அதன் பிரகாரமே நாங்கள் செயற்படுவோம்” என்று இதன்போது ஜனாதிபதியிடம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.