கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனைக் கைது செய்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஒரு கட்டளையைப் பிறப்பிக்கக் கோரி, ஜே.வி.பியினால் தாக்கல் செய்யப்பட்ட ஆணைகோரும் மனுவை ஜுலை 25 இல் விசாரணைக்கு எடுப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று (30) அறிவித்தது. இந்த மனு, நீதியரசர்களான கே. மலல்கொட மற்றும் பத்மன் சூரசேன ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இந்த வழக்கைத் தொடர வேண்டுமா அல்லது கைவிட வேண்டுமா எனத் தீர்மானிக்குமாறு, மனுதாரருக்கு நீதிமன்றம் பணித்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில், குமரன் பத்மநாதனின் (கே.பி) இயக்க நடவடிக்கைகள் பற்றிய விசாரணை அறிக்கையின்; முன்னேற்றம் பற்றிய அறிக்கையை சட்டமா அதிபர், பெப்ரவரி 3 அன்று நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தார்.