இருப்பினும், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவர் தொடர்பான தகவலை அறிந்துகொள்வதற்காக, இராணுவத் தளபதியுடன் தான் தொடர்புகொண்டு வினவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் கைதுசெய்யப்பட்ட ஒருவரை விடுவிக்குமாறு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தது உண்மையே’ என, இராணுவத் தளபதி, நேற்று (16) ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தமை குறித்து விளக்கமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதால், நீர்கொழும்பு பிரதேசத்தில் பதற்ற நிலைமைகள் தோன்றலாமென, அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பலர் எனக்குத் தெரிவித்தனர். இதன் காரணமாக, நீர்கொழும்பு பிரதேசப் பள்ளிவாசல்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யுமாறும், அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தெரிவித்திருந்தனர்.
“இதனையடுத்து, இராணுவத் தளபதியுடன் நான் தொடர்பு கொண்டு, இது தொடர்பில் கூறினேன். மேலும், சந்தேகத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்பட்ட ஒருவர் தொடர்பில் தெரிவித்து, அவ்வாறான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்ற விபரத்தையே நான் வினவினேன். ஆனால், அந்த நபரை விடுவிக்குமாறு நான் கோரவில்லை.
“இராணுவத் தளபதியுடனான உரையாடலை, நான் எனது அலைபேசியில் பதிவுசெய்து வைத்துள்ளேன். தேவையாயின், அதனைத் தரமுடியும். இதனைத் தவிர, சந்தேகத்தில் கைதான எவரையும் நான் விடுக்குமாறு கோரவில்லை என்பதை, பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
“இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ, வேறு எவரிடமோ, நான் எவரையும் விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுவிக்கவில்லை” என்று, அமைச்சர் ரிஷாட் மேலும் கூறியுள்ளார்.