அதற்குப் பின்னர், பெரும்பான்மையின வாக்குகளை அள்ளி வளைத்துப்போட்டுக்கொள்ளும் வகையிலேயே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. ஆக, பெரும்பான்மையின மேலதிகத்தைத் தெட்டத்தெளிவாகப் புடம்போட்டுக் காட்டும் வகையிலேயே காய்கள் நகர்த்தப்பட்டன.
சதுரங்கத்தில் காயொன்றை நகர்த்துவதற்கு முன்னர், பலகோணங்களில் சிந்திக்கவேண்டும். இல்லையேல், முன்னணி படையினரை இழந்து, ராஜாவை இழந்துவிடும் துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்படும். அதேபோலதான், அரசியலிலும் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு, பல்வேறான திருகுதாளங்கள் செய்யப்படும்.
சிறுபான்மையினரின் ஒத்துழைப்பின்றி ஆட்சிபீடமேற முடியாது என்றிருந்த நிலைமை மலையேறி, அப்படியொரு பிரிவினரே இல்லையென்ற நிலைமையே உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்ட நகர்வாக, மாகாண சபைகளில் சிறுபான்மை இனப் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
அதாவது, விகிதாசார பிரதிநிதித்துவத்தின் பிரகாரம், எழுபதுக்கு முப்பது என்ற அடிப்படையில், மாகாண சபைகள் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இறங்கியிருக்கும் அரசாங்கம், களத்தில் நின்று தீவிரமாகச் செயற்படுகிறது.
அதில், இலகுவில் அரசாங்கம் வென்றுவிடும்; ஆனால், மாகாண சபையிலேயும் சிறுப்பான்மையினம், சதாகாலமும் பெரும்பான்மை இனத்திடம் கையேந்த வேண்டிய நிலைமை ஏற்படும். இதனால்தான், குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட தனித் தமிழ் மக்கள் மாத்திரம் உள்ளடங்கும் வகையில், 25 தமிழ்த் தேர்தல் தொகுதிகளை உருவாக்குமாறு, அரசாங்கத்தின் கோட்டைக்குள் இருந்துகொண்டே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
வெளியிலிருந்து எதிர்ப்பது என்பதற்கப்பால், உள்ளேயே இருந்து எதிர்ப்பதற்கு ஒரு தென்புவேண்டும். அதிலும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்புச் செயலாளராக இருந்துகொண்டு, பிரதமரின் கூட்டத்திலேயே கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட செந்தில் தொண்டமானின் தைரியத்தை பாராட்டியே ஆகவேண்டும்.
சிறுப்பான்மையின மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதற்காக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையின் கீழான நலன்களை, அவ்விரு மாகாணங்களையும் தவிர, ஏனைய மாகாணங்களே அனுபவிக்கின்றன.
புதிய முறைமையின் கீழும், அவ்விரு மாகாணங்களிலும் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாது. ஆனால், ஏனைய மாகாணங்களில் வாழும் சிறுபான்மை பிரதிநிதித்துவம் சரியாக அரைவாசி குறைந்துவிடும். இது, எதிர்காலத்தை சூன்யமாக்கும். அப்பிரதிநிதித்துவத்தை ஓரளவுக்கேனும் காப்பாற்றுவதற்கு செந்தில் தொண்டமான் முன்வைத்திருக்கும் காலை வாரிவிடாது, தோளோடு தோள்கொடுக்கவேண்டியது, சிறுபான்மை இனப் பிரதிநிதிகளின் தார்மிக பொறுப்பாகும் என்பதை நாமும் வலியுறுத்துகின்றோம்.
(Tamil Mirror)