//இலங்கையை பொறுத்த வரை சற்று ஆறுதல் அடையலாம். ஏன் தெரியுமா கடந்த கால போகத்தில் சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டது இதிலிருந்து சுமார் 3.2 மில்லியன் டன் நெல் கிடைக்கும். இந்த சிறு போகத்தில் 2.மில்லியன் டன் நெல் வரும். இதில் விதை நெல் கழிவு எல்லாம் போக 4.8 மில்லியன் டன் வரும். இதனை அரிசியாக்கினால் 2.5 – 3 மில்லியன் டன் அரிசி வரும். நமக்கு மாதம் 2 இலட்சம் தேவை. அப்படி பார்த்தால் 12 – 15 மாதங்களிட்கு அரிசி உள்ளது. பயப்பட வேண்டாம் ஆனால் பருப்பு, மிளகாய், வெங்காயம் போன்றவைக்கு பிரச்சனை வரலாம். அதனையும் சமாளிக்க திட்டம் உள்ளது. உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க நல்ல சந்தர்ப்பம்.//
இது மிகவும் பயனுள்ள விபரம். அது மட்டுமல்ல, இன்றைய கொரோனா அவசரகால நிலைமையில் அரிசி ஆலைகளை அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாக அறிமுகப்படுத்தியதும், மேலே தரப்பட்ட தகவலுக்கு சாதகமாகவே உள்ளது. மேலும் சிறீ லங்கா கடலுணவு போன்றவற்றை ஏற்றுமதி செய்வதில் பொருளாதார நட்டங்களை எதிர் கொள்ளலாம். இருப்பினும் அவை இன்றைய நெருக்கடியில் உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயன்படும் என்பதே உண்மை. வீட்டுத் தோட்டத்தை முன்னெடுப்பதில் இன்றைய அரசு ஆர்வம் காட்டுகிறது. உடனே விளைவிக்க முடியுமா என்பது கேள்வியாக இருந்தாலும், இன்றைய தொழில்நுட்ப வசதிகளில் வரண்ட பிரதேசங்களிலும் கூட அவ்வாறான சாத்தியப்பாட்டை ஏற்படுத்தலாம் என்பதே அனுபவரீதியான உண்மை.
ஆகவே சிறீ லங்கா கொரோனா வைரஸ் ஐத் தொடர்ந்து உணவு உற்பத்தியில் பின்தங்கும் எனும் பயம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இவ்உற்பத்திகள் நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட்டு மக்களைச் சென்றடையுமா என்பது பலரது கேள்வியாக இருக்கும். இது பற்றி இன்றைய அரசு தக்க ஒழுங்குமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், நிவாரணப்பணிகளையும் அமுல்படுத்தல் அவசியம். மக்களும், விநியோகஸ்தரும், வியாபாரிகளும், பொறுப்பேற்கும் அதிகாரிகளும் அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஒத்துழைக்க வேண்டும்.