குறித்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை என்று, சீனாவின் சுகாதார ஆணைக்குழுவின் பிரதி அமைச்சர் லீ பின் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 440க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்நாட்டின் வுஹேன் பிராந்தியத்தில் இனங்காணப்பட்ட குறித்த நோயானது, மேலும் சில பகுதிகளுக்கும் வியாபித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜப்பான், தாய்லாந்து, தென்கொரியா ஆகிய நாடுகளிலும், குறித்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அபாயகரமான குறித்த வைரஸ் குறித்த எச்சரிக்கையுடன், சுகாதாரச் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு, உலகச் சுகாதார அமைப்பு, அனைத்து நாடுகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கமைய, பாதிக்கப்பட்ட பிரேதசங்களில் இருந்து வருகைதரும் பயணிகள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று, இலங்கைத் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தொரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா வைரஸை இனங்காண்பதற்காக, விமான நிலையத்தில், 3 விசேட தானியங்கி இயந்திரங்களைப் பொருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்கான பயணிகள் இனங்காணப்படும் பட்சத்தில், அவர்களை உடனடியாக ஐ.டீ.எச் மருத்துமனைக்குக் கொண்டுசெல்ல, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
சீனாவிலிருந்து நாளாந்தம் 1,000 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவதோடு, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பயணிகளும் அதிகளவில் வருகை தருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளுக்கு, குறித்த வைரஸ் தொடர்பான அறிகுறிகள் காணப்படின், அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையச் சுகாதாரப் பிரிவிடம் பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.