கொழும்பு அரசியலில் பரபரப்பு: அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

ஜனாதிபதி செயலக பகுதியில், வழமைக்கு மாறாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அலுவலகம் முடிவடையும் நேரம் என்பதால், அந்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

பலம் வாய்ந்த அமைச்சரவை அமைச்சர் ஒருவரை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தப்பட்ட அமைச்சரும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில்  ரணில் விக்கிரமசிங்கவுக்காக தொடர்ந்தும் நிற்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அமைச்சர் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு   அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த ஜனாதிபதியின் தீர்மானத்தை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி மேதகு கர்தினால் மல்கம் ரஞ்சித் உள்ளிட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுத்த உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது

இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியிலேயே விசேட அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.