வடமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் மேடையில் உட்கார்ந்திருக்க, கடந்த அமர்வுகளில் துப்பாக்கி விவகாரத்தை எழுப்பி, சபையில் குழப்பத்தை ஏற்படுத்திய சயந்தன், அஸ்மின் அணியை கோமாளிகள் என பகிரங்கமாக விமர்சித்தார்.“தாயக நிலப்பரப்பில் 15 ஆயிரம் சதுரகிலோமீற்றருக்கு அதிகமான நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இனம், ஏராளம் தியாகங்களை செய்த இனம், பல்லாயிரம் உயிர்களை விடுதலை போராட்டத்தில் தியாகம் செய்த இனம்,இன்று என்ன செய்கிறது? மாகாணசபை கோமாளிகளின் கூடாராமாகி விட்டது. அங்கே அவர்கள் துப்பாக்கி இருக்கிறதா? இல்லையா? என பட்டிமன்றம் செய்து கொண்டிருக்கிறார்கள்“ என காட்டமாக விளாசினார்.
இதன்போது மேடையில் உட்கார்ந்திருந்த கேசவன் சயந்தன் சங்கடத்துடன் நெளிந்து, அருகில் இருந்த மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் சிரித்து பேசி நிலைமையை சமாளித்துக் கொண்டார்.இதேவேளை, வடக்கு முதலமைச்சர் மீதும் வரதராஜபெருமாள் விமர்சனங்களை வைத்தார். “மாகாணசபையின் அதிகாரமின்மை தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்திருக்கலாம். நான் முதலமைச்சர் எனில் அதை செய்திருப்பேன். சட்டமேதையான முதலமைச்சர் அதை செய்யவில்லை.
மாகாணசபை சட்டவாக்க அதிகாரத்தை மத்திய அரசு அனுமதிக்கவில்லையென குற்றம் சொல்கிறார்கள். அண்மையில் முதலமைச்சரை சந்தித்தபோது, நீங்கள் சட்டங்களை இயற்றினீர்களா என்றேன். மூன்று சட்டங்களை இயற்றி, மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பியதாகவும், அவர்கள் அனுமதிக்கவில்லையென்று சொன்னார். நானாக இருந்தால் முன்னூறு சட்டங்களை அனுப்பியிருப்பேன்.
தமிழர்களின் விடுதலை போராட்டம் தோல்வியடைந்தது 2009 இல் என்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல 1986 ஏப்ரலில் தோல்வியடைந்து விட்டது. (ஏப்ரலில் ரெலோவை புலிகள் தடை செய்திருந்தார்கள்) ஒருகாலத்தில் எல்லா இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்தோம். பிரபாகரன் புலிகளை விட்டு வந்தபோது, அவரை நாங்கள் “போடவில்லை“. அவரை அரவணைத்து ஒற்றுமையாக செயற்பட்டோம். நான் எடுத்திருந்த வாடகை வீட்டிலேயே ரெலோ பிரமுகர்களுடன் தங்கியிருந்தார்.
அங்கிருந்தபடியே நான் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் கூட்டங்களிற்கு சென்ற வந்தேன். எனது இன்னொரு வாடகை வீட்டில் ஈரோஸ் அமைப்பினர் தங்கியிருந்தனர். எனது மகளிற்கு மாத்தையா சொக்லேட் கொடுப்பார். சகோதர மோதல் ஆரம்பித்த பின்னர், நாம் தமிழீழ இலட்சத்தியத்தில் தோல்வியடைந்து விட்டோம்“ என்றார்.நன்றி….pagetamil இணையத்தளம்