கோரத்தாண்டவத்தால்: 128,428 பேர் பாதிப்பு

8 பேர் பலி, இருவர் மாயம்
118 வீடுகள் சேதமடைந்தன
5,196 பேர் இடம்பெயர்வு

வளிமண்டலத்தில் ஏற்பட்ட தாழமுக்கமானது, நாட்டை விட்டு அப்பால் சென்றவண்ணம் இருந்தாலும், வீரியமுள்ள மேகமூட்டம் நாட்டைச் சூழ்கொண்டிருக்கும் வரையிலும், நாட்டில் ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலை நீடிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

14 மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களால், பத்து மாத சிசு உட்பட எண்மர் பலியாகியுள்ளனர்.

மண்சரிவுகளில் சிக்கி மூவர் காயமடைந்தும், ஆறுகளில் தவறி வீழ்ந்து இருவர் காணாமல் போயும் உள்ளனர். இந்த அனர்த்தங்களினால், 7 வீடுகள் முழுமையாகவும் 111 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இதேவேளை, 1,858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க, நிலவிவரும் சீரற்ற வானிலை தொடர்பாக ஆராய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், விசேட கூட்டமொன்று நேற்று இடம்பெற்றது. இதன்போது, இந்த அனர்த்தங்களால், 31, 062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்போது, உலருணவுப் பொருட்களுக்குப் பதிலாக வழங்கப்படும் கொடுப்பனவின் தொகையை, 150 ரூபாயிலிருந்து 225 ரூபாயாக அதிகரிக்க, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் தகவல்களின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டோர் விவரம்:

கொழும்பு – 4,813 குடும்பங்கள், 4,865 பேர்.
களுத்துறை – 55 குடும்பங்கள், 256 பேர்.
இரத்தினபுரி – 534 குடும்பங்கள், 2,220 பேர்.
கேகாலை – 1,507 குடும்பங்கள்.
நுவரெலியா – 36 குடும்பங்கள், 162 பேர்.
கண்டி – 39 குடும்பங்கள், 172 பேர்.
மாத்தளை – 5 குடும்பங்கள், 16 பேர்.
காலி – 303 குடும்பங்கள், 1,237 பேர்.
அநுராதபுரம் – 1 குடும்பம், 7 பேர்.
பொலன்னறுவை – 32 குடும்பங்கள், 134 பேர்.
குருநாகல் – 545 குடும்பங்கள், 2,059 பேர்.
வவுனியா – 4 குடும்பங்கள், 12 பேர்.

எவ்வளவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், நீர்கொழும்பைச் சேர்ந்த மீனவர்களில் இருவர், கடலுக்கு நேற்றுச் சென்று அலைகளில் சிக்குண்டு தத்தளித்துக் கொண்டிருந்தனர். இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட நான்கரை மணிநேர நடவடிக்கையின் பின்னர், அவ்விருவரும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, காலி, பொத்தல பகுதியில் அறுந்து விழுந்த மின்வடத்தைத் தவறுதலாக மிதித்த இருவர் பலியாகியுள்ளனர்.
அவிசாவளை, தெஹியோவிட்ட பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு, இரெக்ட் தமிழ் வித்தியாலய அதிபர் லட்சுமணன் (55), ஆனந்தராஜ் (28), லட்சுமி ஆகிய மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் இரண்டு அடிக்கு வெள்ளநீர் நிரம்பியிருந்த வீட்டுக்குள் பெற்றோர் மற்றும் சகோதரனுடன் கட்டிலில் உறங்கிக்கொண்டிந்த 10 மாத சிசு, கட்டிலிலிருந்து 16ஆம் திகதி அதிகாலை, கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
வத்தளை, ஹெந்தல அவரகொட்டுவ பிரதேசத்தில் வசிப்போரின் மகளான பாத்திமா சனிஹா என்ற சிசுவே மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, எஹலியகொட பனாவல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது மண்திட்டு சரிந்து விழுந்ததில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவியும் இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் பனாவல படங்கல பிரதேசத்தில், நீரில் அடித்துச்செல்லப்பட்ட 49 வயதானவர், காணாமல் போயுள்ளார்.

அதுமட்டுமன்றி, சீதாவாக்க கங்கைக்குள் விழுந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரும் (57) காணாமல் போயுள்ளார்.

மாத்தறை, கும்புருகமுவ குளத்துக்கு அருகில் மரமொன்றின் கிளை முறிந்து விழுந்ததில், சைக்கிளில் பயணித்துகொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார்.

கட்டுநாயக்கவில் பெய்த அடைமழை காரணமாக, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள், மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் திருப்பிவிடப்பட்டன.

இது இவ்வாறிருக்க, இரத்மலானை விமானப்படைத்தளத்தின் விமான ஓடுபாதையில் வெள்ளம் தேங்கி நின்றமையால், நேற்றைய பயிற்சிகள் யாவும் இடைநிறுத்தப்பட்டன என்றும், மறு அறிவித்தல் வரையிலும் பயிற்சிகள் பிற்போடப்பட்டுள்ளன என்றும் இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது.

இதேவேளை, மன்னார் பேசாலைக் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40 படகுகள், கடுங்காற்றுக் காரணமாக, சேதமாகியுள்ளன. திடீரென வீசிய கடுங்காற்றினால், பெரியளவிலான படகுகள் 20 சேதமடைந்ததுடன் ஏனைய 20 படகுகள் கடலில் மூழ்கியுள்ளன.

இதேவேளை, மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, பொதுமக்கள் வேண்டப்படுகின்றனர்.
(tamilmirror)