கடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதியன்று, கால்பந்தாட்டப் பயிற்றுனர் ஒருவரும் அவருடன் சென்ற சுமார் பன்னிரண்டு மாணவர்களும், தாய்லாந்தில் இருக்கிற தம் லுங் நாங் என்ற குகைக்குள் சிக்கிக்கொண்டார்கள்.
தாய்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்தக் குகை, ஒரு சுற்றுலாத் தளமாக இருந்திருக்கிறது. உரிய முன் அனுமதி பெற்றபிறகே, குகைக்குள் செல்ல அனுமதிக்கபடுவர். மழைக்காலம் என்றால், யாருக்கும் அனுமதி கிடையாது. இந்நிலையில், பன்னிரண்டுச் சிறுவர்கள் மற்றும் அவர்களது கோச் ஆகியோர், உரிய அனுமதியுடன் குகைக்குள் சென்றபோது, திடீரென மழை பெய்திருக்கிறது. வெள்ள நீர் குகைக்குள் புகவே, அவர்கள் அதற்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நீண்ட நேரமாகியும், அவர்கள் வெளிவராததை அடுத்து, விடயம் மெல்லக் கசிய ஆரம்பித்தது. தாய்லாந்து அரசாங்கம், உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்பதற்காக, இராணுவத்தின் உதவியை நாடியது. இராணுவத்தினர் வந்த பிறகு, இந்த விடயம் தீயாய்ப் பரவ, இந்த நிகழ்வுக்கு, உலக நாடுகள் பலவும் உதவி செய்ய ஆரம்பித்தன. பலரது உழைப்பினால், உள்ளே சிக்கியிருந்த பதிமூன்று பேரும், பத்திரமாக மீட்கப்பட்டனர்.
முதலில், குகையின் எந்தப் பகுதியில் மாணவர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியவில்லை. நீச்சல் வீரர்கள் உள்ளே சென்று, அவர்கள் சிக்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்தார்கள். அதனை, வீடியோவாகப் பதிவுசெய்து வெளியிட்ட பின்னரே, பதிமூன்று பேரும் உயிருடன் இருக்கிறார்கள் என்ற முதற்கட்டத் தகவல், மீட்புப் படையினருக்கும் வெளியில் காத்திருந்த உறவினர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
அவர்கள் சிக்கியிருந்த இடத்திலிருந்து வெளியில் அழைத்துவருவது, அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏனென்றால், அவர்கள் வெளியேறுவதற்காக இருந்த இடைவெளி, நாற்பதிலிருந்து நாற்பதைந்து சென்றிமீற்றர் அகலத்தைக் கொண்டதாக மட்டுமே இருந்தது.
உள்ளே சிக்கியிருக்கும் குழந்தைகளுக்கு, அவ்வளவாக நீச்சல் தெரியாது. அத்தோடு, கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கும் மேலாக உள்ளே சிக்கியிருப்பதால், அவர்கள் மிகவும் பலவீனமாக இருப்பார்கள். அதனால், பெரும் போராட்டம் இதில் இருக்கிறது என்பது தெரிந்தது.
இந்நிலையில், ஒரு குழந்தைக்கு இரண்டு பாதுகாப்பு வீரர்கள் என்ற அடிப்படையில், மீட்புப்படையினர் உள்ளே சென்றனர்.
குகைக்கு வெளியே இருந்து, ஓரு கையிறுகள் மூலமாகத் தங்களை இணைத்துக் கொண்டு நீச்சலடித்தவாறே அவர்கள் குகைக்குள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், முதற்கட்டமாக நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டார்கள்.
ஒரு வீரர், தன் முதுகில் ஒரு குழந்தையை வைத்துக் கட்டிக் கொள்ள இன்னொரு வீரர், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் விதமாகப் பின்னாலேயே வந்திருக்கிறார்.
அந்த நாற்பத்தைந்து சென்றிமீற்றர் தூரத்துக்கு அருகில் வந்ததும் தான் பிரச்சனையே. இந்த இடத்தினூடாக, ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே செல்ல முடியும். அத்தோடு ஒட்சிசன் சிலிண்டருடன் செல்ல முடியாது.
முதுகில் குழந்தையுடன் இருக்கும் வீரர், முதலில் குழந்தையைப் பின்னால் வரும் வீரரிடம் கொடுத்துவிட்டு, அவர் மட்டும் அந்தக் குறுகலான இடைவேளியைக் கடந்து மேலே ஏறியிருக்கிறார். பின்னர், அந்த வீரரின் கையிலிருக்கும் குழந்தையை, அந்த குறுகலான இடைவேளி வழியே பாதுகாப்பாக மேலே தூக்கியிருக்கிறார்கள். சிறுவன் மேலே சென்று சேர்ந்ததும்> பின்னால் வந்த வீரர் தொடர்ந்து மேலே ஏறியிருக்கிறார்.
இப்படித் தான், எல்லோரையும் மீட்டிருக்கிறார்கள். முதல் நாளில் மீட்கப்பட்ட சிறுவர்கள் நான்கு பேரும், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இப்படியாக, அடுத்தடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடந்தன.
ஜூன் 23ஆம் திகதியன்று குகைக்குள் சிக்கிக் கொண்டவர்கள், சுமார் பதினெட்டு நாட்கள் இடைவேளியில், அதாவது ஜூலை பத்தாம் திகதியன்றே உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மீட்புப் பணியில், 90 நீச்சல் வீரர்கள் வரை ஈடுபட்டுள்ளார்கள். இவர்களில் நாற்பது பேர், தாய்லாந்திலிருந்து வந்தவர்கள் என்றும் ஏனைய ஐம்பது பேர், வெளிநாடுகளிலிருந்து சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மீட்கப்பட்டவர்களில், கோச் மட்டும், மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
அத்தோடு, மீட்கப்பட்ட அனைவரும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்த நோய்த்தொற்றும் இல்லை என்று உறுதி செய்த பின்னரே, பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்க்க அனுமதிக்கப்படுவர் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
உலக மக்களையே ஒருகணம் திரும்பிப் பார்க்கச் செய்த இந்த சம்பவத்தின் முக்கிய அடிநாதம், பன்னிரெண்டு பேரையும் பதினெட்டு நாட்களாக உள்ளே பாதுகாப்பாக வைத்திருந்த அந்த கோச் தான்.
மீட்கப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், “நிச்சையமாக கோச் மட்டும் அவர்களுடன் இல்லையென்றால், எங்கள் குழந்தைகளை நாங்கள் உயிருடனேயே பார்த்திருக்க முடியாது” என்றிருக்கிறார்கள். உள்ளே பதினெட்டு நாள்கள் அவர்கள் என்ன செய்தார்கள்? எந்த நம்பிக்கையில், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அந்த இருட்டில் காத்திருந்தார்கள்?
இந்த விவரங்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால், முதலில் அந்த கோச் பற்றிய சில தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். இருபத்தைந்து வயதே நிரம்பிய அந்த கோச்சின் பெயர், எக்காபோல் சண்டாவோங்.
முதலில் சிறுவர்கள் உள்ளே சிக்கியிருக்கிறார்கள் என்று தெரிந்ததுமே, எக்காபோலை வெளியில் இருப்பவர்கள் திட்டித் தீர்த்தார்கள். சிறுவர்களை எல்லாம் இப்படியான இடங்களுக்கு அழைத்துச் செல்லலாமா என்று புலம்பினார்கள். ஆனால் இப்போதோ, நிலைமை வேறு. திட்டிய வாயாலேயே பலரும் எக்காபோலைக் கையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொல்கிறார்களாம்.
எக்காப்போல் ஓர் ஆதரவற்றவர். தன்னுடைய பத்து வயதின் போது, தான் வசித்த கிராமத்தில் பரவிய ஒரு தீடீர் காய்ச்சலில், தன் ஒட்டுமொத்தக் குடும்பத்தையே இழந்து நிராதரவாக நின்றார். அதன் பிறகு உறவினர்களிடம் தஞ்சம் புகுந்தார். பன்னிரண்டு வயதான போது ஓர் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். எப்போதும் தனிமையை அதிகம் விரும்பக் கூடியவராகவே இளமையில் இருந்திருக்கிறார்.
பௌத்த துறவியாகிவிட வேண்டுமென்று, அதற்கான பயிற்சியில் இருந்தபோதே, தன்னுடைய பாட்டியைப் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். தாய்லாந்தில் வசித்துவந்த பாட்டியைப் பார்த்துக்கொள்ள வேண்டி, துறவறத்தை விட்டுவிட்டு, மீண்டும் நகர வாழ்க்கைக்கு வந்திருக்கிறார்.
பாட்டியை பார்த்துக் கொள்வது, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்வது, கோயில்களில் பணிபுரிவது என்று இருந்திருக்கிறார். அப்போது தான், புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த மோ பா என்ற ஃபுட் போல் குழுவில் பயிற்சியாளராகச் சேர்ந்திருக்கிறார்.
அந்தக் குழுவில் இடம்பெற்ற மாணவர்கள் அனைவரும், மைனாரிட்டி இனத்திலிருந்து வந்தவர்கள். கூடவே, வறுமையும் அவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தது. பெரும்பாலானவர்கள், மியான்மார் – தாய்லாந்து எல்லைப் பகுதியில் வசிக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.
ஒரு வகையில், அந்த மாணவர்களைப் போலத்தானே தானும் தன் இளமைக்காலத்தில் உதவி கிடைக்காமல் தவித்தோம் என்று நினைத்தார் எக்காப்போல். இதனால், தன்னை விட அந்த மாணவர்களை அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்.
எக்காப்போல் குறித்து, அவருடைய நீண்டகால நண்பர் ஜாபய் கம்பாய் கூறுகையில், “அவன் மது அருந்தமாட்டான், புகைப்பிடிக்க மாட்டான். தன்னை மாணவர்கள் ஒரு ரோல்மொடலாகப் பார்க்கிறார்கள். மாணவர்களுக்கு ஒரு சிறந்த அடையளாமாக இருக்க விரும்புகிறான். அவர்களுக்கு நல்லதைச் சொல்லிக் கொடுக்கும் தானும் அப்படியே இருக்க வேண்டுமென்று அடிக்கடி சொல்வான்” என்றார்.
எக்காபோல், கோச்சின் உதவியாளராகவே இருந்திருக்கிறார். நோப்பராட் என்பவரே, தலைமைக் கோச்சாக இருந்தார். அவரும், எக்காபோலுக்கு தொடர்ந்து உற்சாகம் அளித்து வந்திருக்கிறார். எக்காப்போல், மாணவர்களுக்கு விளையாட்டு நுணுக்கங்களை மட்டுமன்றி, வாழ்க்கை சார்ந்த பாடங்கள், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் தன்னம்பிக்கை குறித்தும், அடிக்கடி பாடம் நடத்துவாராம். கல்வியில் தொடந்து கவனஞ்செலுத்த வேண்டுமென்று முக்கியத்துவம் கொடுப்பாராம்.
நல்ல முறையில் மதிப்பெண் பெறுகிறவர்களுக்கு ஷூ, ஷோர்ட்ஸ், ஃபுட்போல் போன்ற பரிசுகளை, மாணவர்களுக்குக் கொடுத்து உற்சாகப்படுத்துவாராம்.
எக்காப்போல் குறித்து, தலைமை கோச் நோப்பராட் கூறுகையில், “அவன் தனக்காக யோசித்ததை விட, மாணவர்களுக்காகத் தான் நிறைய யோசித்திருக்கிறான். எங்கள் அணியின் திறமையை வெளிப்படுத்த, மாணவர்களுக்காக ஸ்பான்சர் கேட்டு நிறைய போராடியிருக்கிறான்.
“அந்த மாணவர்களுக்கு, அவர்களின் பெற்றோர் காட்டுகிற அக்கறையை விட இவன் நிறைய அக்கறை எடுத்துக் கொள்வான். ஒவ்வொருவரையும் தன் உடன் பிறந்த சகோதரர்களாகவே பார்த்தான். அதற்காக, அவர்களை அதிக செல்லம் கொஞ்சி கெடுக்கவில்லை. விளையாட்டு, பயிற்சி என்று வந்துவிட்டால், எக்காப்போலைப் போன்று ஸ்ட்ரிக்ட் ஆசாமியைப் பார்க்க முடியாது. மைதானத்தில் அளிக்கும் பயிற்சி மட்டும் போதாது. அவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் கொடுக்கப்பட வேண்டும். மலையேற்றப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்பான்” என்றிருக்கிறார்.
குகைக்குள்ளிருந்து மீட்கப்பட்ட போது, எக்காப்போல் தான் மிகவும் பலவீனமாக இருந்தாராம். குறைந்த அளவிலான உணவு மற்றும் தண்ணீரே இருந்திருக்கிறது. அதனையும் மாணவர்களுக்குக் கொடுத்து, சுமார் பத்து நாட்களுக்கும் மேலாக பட்டினி கிடந்திருக்கிறாராராம்.
அது மட்டுமல்லாமல் உள்ளே மாணவர்களுக்கு தைரியமூட்டி, தங்களை மீட்கும் வரை என்ன செய்ய வேண்டும்? எப்படி எனர்ஜியுடன் இருப்பதென்றும் மூச்சுப் பயிற்சி குறித்தும் சொல்லிக் கொடுத்துக் கொண்டேயிருந்தாராம். அத்தோடு குகையின் சுவர்களில் வழிந்தோடும் தண்ணீரை எப்படிப் பிடித்து குடிப்பது? இந்த தண்ணீர் குடிப்பதற்கு ஏதுவானதா இல்லையா என்பது பற்றியெல்லாம், உள்ளே சிறுவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
இவர்களின் மீட்புப் பணி, மூன்று கட்டங்களாக நடந்தது. முதற்கட்டத்தில், நான்கு மாணவர்களை அழைத்துச் சென்ற போது, வீரர்களிடத்தில் தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் எக்காபோல்.
அதில், “உங்கள் குழந்தைகளை இறுதி வரை பத்திரமாகப் பாதுகாப்பேன். நிச்சயமாக, உங்களுடைய ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதே நேரத்தில், உங்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தாராம்.
சிக்கிக்கொண்டிருந்த சிறுவர்கள், 11 முதல் 16 வயதுடையவராக இருந்துள்ளார்கள். இவர்கள், சோக்கர் எனப்படுகிற கால்பந்தாட்டத்திலேயே ஒரு வகை விளையாட்டை விளையாடும் வீரர்களாவர்.
மியான்மார் எல்லையில் இருக்கும் இந்தக் குகைக்கு, ஒரு மாணவனின் பிறந்தநாளைக் கொண்டாடும் பொருட்டே சென்றதாகவும் அதே நேரத்தில், அந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கான பயிற்சியையும் முன்னெடுக்க முடியுமென்று கோஷ் எக்காபோல் நினைத்திருந்தார்.
நீதித்துறையில் உதவி இயக்குநராக இருந்த தவாட்சாய் தாய்கியு என்பவர் கூறுகையில், “எனக்கிருந்த ஒரே பயம் எக்காப்போல் மனதளவில் எப்படியிருக்கிறார் என்பது தான். இந்தச் சூழலில், யாராக இருந்தாலும் மன அழுத்தத்துக்குச் சென்றிருக்கக்கூடும். அதன் தீவிரம், அதிகமாக தற்கொலை செய்துகொள்ளக்கூட யோசிக்கமாட்டார்கள். ஏனென்றால், வெளியிலிருந்து பன்னிரண்டு மாணவர்களின் உயிரில், இந்த கோச் விளையாடியிருக்கிறார்.
“மாணவர்களைக் கொண்டு இப்படியொரு ஆபத்தான பயணம் மேற்கொள்வது சரியானது தானா என்று தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்கள். தன் இளமையிலிருந்து, பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வளர்ந்த எக்காப்போல், இந்த விமர்சனங்களை எப்படித் தாங்கிக் கொள்வார் என்ற அதிர்ச்சி தான், என்னிடம் இருந்தது. அதைவிட, தன் உடன் பிறந்தவர்களைப் போல நேசித்த மாணவர்களுக்கு, தன்னால் இப்படியொரு நிலைமை வந்துவிட்டதே என்ற எண்ணமே, அவரை நச்சரித்துக் கொண்டேயிருக்கும்.
“இதிலிருந்து அவர் மீண்டுவர வேண்டும். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், அவரது இந்தப் போராட்டத்துக்கு நன்றி சொல்வேன். அவருக்குக் கண்டிப்பாக ஒரு ஹக் கொடுக்க வேண்டும். “நீ ஜெயித்து விட்டாய்” என்று, எக்காப்போலிடம் சொல்ல வேண்டும். நிச்சயமாக அவரைப் போய் சந்திப்பேன்” என்றிருக்கிறார்.
ஒரு பக்கம் எக்காப்போலுக்கு ஆதரவாகவும் அவரைப் பாராட்டியும் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும், தொடர்ந்து அவருக்கு எதிராகவும் கருத்துகள் பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது.
உலகையே திரும்பிப் பார்க்கவைத்த இந்தச் சம்பவத்தை, ஹொலிவூட் திரைப்படமாக எடுப்பதற்கான பேச்சு ஆரம்பித்து விட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
(நன்றி: தமிழ்போல்ட்ஸ்கை)