கட்சி நடவடிக்கைகளிலும், ஆட்சி நிர்வாகத்திலும் சசிகலா குடும்பத்தினரின் தலையீடு அறவே இல்லாத வகையில், அந்தக் குடும்பத்தினரை முழுமையாக ஒதுக்கிவைக்க முடிவு செய்திருப்பதாக அதிமுக அமைச்சர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தமிழகத்தின் பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
டிகேஎஸ் இளங்கோவன் (திமுக செய்தித் தொடர்பாளர்): லஞ்ச வழக்கில் இருந்து தினகரனை காப்பாற்றவே இந்த முயற்சி.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்): மோடி, அமித்ஷாவின் நடவடிக்கையே இப்போதைய பிரச்சினைக்குக் காரணம். வருமான வரி சோதனையைப் பயன்படுத்தி அதிமுக கட்சியை உடைக்க பாஜக முயற்சி.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ் மூத்த தலைவர்): தற்போது நடைபெறுவது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை.
சீமான் (நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்): அதிமுகவில் இருந்து சசிகலா,தினகரன் விலக்கப்பட்டதற்கு பின்னணியில் பாஜக உள்ளது. இது மக்களின் விருப்பம் அல்ல. பதவியை தக்கவைத்துக்கொள்ள அமைச்சர்கள் எடுத்த முடிவு.
ஹெச்.ராஜா (பாஜக மூத்த தலைவர்): உட்கட்சி பிரச்சினையில் கருத்து சொல்ல எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கோ, மத்திய அரசுக்கோ நூறு சதவீதத் தொடர்பு இல்லை.
இரா.முத்தரசன் (சிபிஐ மாநில செயலாளர்): அமைச்சர்கள் எடுத்த முடிவு சுயமானதாகத் தெரியவில்லை.
தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்): கட்சி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் பிரச்சினையை தீர்க்க ஆட்சியாளர்கள் முன்வர வேண்டும்.