சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தோற்றுவிடும்

உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது அரசுக்கு எதிரான மனநிலையுடன் மக்கள் வாக்களிப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருக்கிறது.

கரோனா வைரஸ் பரவலை உ.பி. அரசு கையாண்ட விதம், பெண்களின் பாதுகாப்பு, தலித் பிரிவினர், சிறுபான்மையினர் அடக்குமுறை, சிறுபான்மை மீதான தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் உ.பி. தேர்தலில் எதிரொலிக்கும். சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் பாஜகவுக்குக் கடும் போட்டியளிக்கக் காத்திருக்கிறார்கள்.

உ.பி. தேர்தலில் பாஜக செயல்படும் விதம், பெறும் வெற்றியின் அடிப்படையில்தான் 2024 மக்களவைத் தேர்தல் அமையும் என்ற கணிப்பு இருப்பதாலும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த மாநிலத்தில் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 80 எம்.பி. தொகுதிகளும் உள்ளன .

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

”தேர்தல் ஆணையத்தின் மீதான அச்சம் அரசு எந்திரத்துக்கு இருக்க வேண்டும். சுதந்திரமான முறையில், நியாயமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசு எந்திரத்தை பாஜக தவறாகப் பயன்படுத்தாமல், வாக்கு எந்திரத்தில் எந்தத் தில்லுமுல்லும் பாஜக செய்யாமல் தேர்தலைச் சந்தித்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் தோற்றுவிடும்.

உத்தரப் பிரதேசத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, வேட்பாளர்கள் குறித்து இன்று மாலையில் ஆய்வு செய்யப்படுகிறது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் அமைதியாக நடத்தப்பட வேண்டும். எந்தவிதமான தலையீடும் இல்லாமல் போலீஸ் நிர்வாகம் செயல்பட வேண்டும். உ.பி.மக்கள் வளர்ச்சி நோக்கி வாக்களிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் எந்தெந்த விதிகளைச் சொல்லியிருக்கிறதோ அதை எங்கள் கட்சி கடைப்பிடிக்கும்”.

இவ்வாறு மாயாவதி தெரிவித்தார்.

கடந்த 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று 312 இடங்களில் வென்றது. 39.6 சதவீத வாக்குகளைப் பெற்றது. சமாஜ்வாதி 47 இடங்களையும், பகுஜன் சமாஜ் 19 இடங்களிலும் வென்றன. காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் மட்டும் வென்றது.