சமஷ்டி முறையில் சிறுபான்மையினரின் உரிமைகளைக் கொடுத்தால் அவர்கள் உங்களுடன் சேர்ந்திருப்பார்கள் என்று வட மகாணா முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிடுகின்றார். சர்வதேசத்தில் சமஷ்டி ஆட்சி முறை அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் பிரிந்து போகவில்லை என்றும், அரசியல்வாதிகள் சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை விதைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ரெஜினோல்ட் குரே வட மாகாணத்தின் ஆளுனராக நியமிக்கப்பட்டது. நாட்டை துண்டாட அடித்தளமிடுவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளமைக் குறித்து கொழும்பு ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கொழும்பு ஊடகத்திற்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ‘இதுவரை காலமும் அரசியல்வாதிகள், சிங்கள மக்களின் மனதில் சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தினை திணித்து வந்துள்ளார்கள்.
கனடாவில் கியூபெக் என்று பிரெஞ்சு மொழிபேசும் மக்கள் வாழும் பிரதேசம் தனியாக உள்ளது. கியூபெக் மக்கள், கனேடிய அரசாங்கத்திடம் எங்களுக்கு கியூபெக் என்றொரு நாட்டை தாருங்கள் எனக் கேட்கவில்லை. அதற்கென வாக்கெடுப்புக்கள் இடம்பெறும் போதும் நாங்கள் கனடாவுடன் சேர்ந்திருக்க வேண்டும் என்றே கூறினார்கள். அண்மையில் நாங்கள் சுவிட்ஸர்லாந்திலுள்ள நிபுணர்களை இலங்கைக்கு அழைத்து சமஷ்டி அரசாங்கம் குறித்த ஒரு கலந்துரையாடலை வட மாகாணசபை உறுப்பினர்களுக்காக ஒழுங்கு செய்திருந்தோம்.
உலகத்திலேயே சமஷ்டி அரசாங்கம் இருக்கிற நாடுகளில் மக்கள் பிரிந்து போகவில்லை. ஸ்கொட்லாந்து மற்றும் சுவிட்ஸர்லாந்து போன்ற நாடுகளிலும் இதேமுறை காணப்படுகிறது. எங்கெங்கெல்லாம் சமஷ்டி அரசாங்கம் காணப்படுகிறதோ அங்கெல்லாம் மக்கள் பிரிந்து போகவில்லை. ஆனால் இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு உரிமைகளை கொடுத்தால் அவர்கள் பிரிந்து செல்வார்கள் என்ற ஒரு கருத்தே நிலவுகின்றது. நீங்கள் சிறுபான்மை மக்களின் உரிமைகளை கொடுத்து பாருங்கள் அவர்கள் உங்களோடு சேர்ந்திருப்பார்கள்’ என்றும் கூறினார்.