சர்வதேச மனித உரிமைகள் தினம்…. டிசம்பர் 13, 1986

1986 ம் ஆண்டு இதற்கு முதல் நாள் 12 ம் திகதி வழமை போல் ஈழவிடுதலைப் போராட்டதின் தீவிர தலைமறைவு வாழ்வின் மக்கள் பணியை முடித்துக் கொண்டு பாதுகாப்பான இடமொன்றிற்கு நித்திரைக்குச் செல்கின்றேன்.

பகல் முழுவதும் மக்கள் பணியிற்காக அதிகம் துவிச்சக்கர வண்டியின் பயணம் என்றாக கிராமங்கள் பலதை கடந்த அரசியல் செயற்பாடு என்பதாக கடந்த காலங்களில் இரவு வந்தால் மக்களினால் பாதுகாக்கப்படும் இடங்களில் ஒரு வகையில் பலருக்கும் தெரியாத ஒரு பாதுகாப்பான இடத்தில் உறக்கம்.

இராணுவம் யாழ் குடா நாட்டில் 2004 ம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தையின் பின்பு முகாங்களுக்குள் முடக்கப்பட்டிருந்த காலம்.

திம்பு பேச்சுவார்த்தை காலத்திற்கு பின்னரான போர் நிறுத்த முறிவிற்கு பின்னர் போர் நிறுத்த நிபந்தனைகளில் ஒன்றான இராணுவம் முகாங்களுக்குள் முடங்கி இருத்தல் என்பதை உடைத்து இராணுவம் வெளியேற முற்படுகையில் ஒரு வகை எழுதப்படாத ஐக்கியப்பட்ட செயற்பாடாக யாழ் கோட்டையில் இருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்தை யாழ் கோட்டை பொலிஸ் நிலைய கடற்பகுதி தவிர்த்து ஏனைய முன்று பக்கங்களிலும் நின்று பத்மநாபா தலமையிலான அன்றைய ஈபிஆர்எல்எவ், புளட், ரெலோ என்ற அமைப்புகள் தடுத்து நிறுத்தியதாக ஆரம்பிக்கப்பட்டது.

இது தொடர்ந்ததால் இராணுவம் முகாங்களைவ விட்டு வெளியேற முடியாத நிலமைகள் ஏற்பட்டது. இது யாழ் மாவட்டத்திற்கு மட்டும் முழுமையாக பொருந்த இருந்தது.

இதே நிலமையை முல்லைத்தீவு முகாமில் இருந்து வெளியேற முற்பட்ட இராணுவத்திற்கும் ஏற்பட்டதினால் அவர்களும் முடங்கி இருந்தனர்.
இதன் தொடர்ச்சியால் யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுதலைப் போராட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த எங்களைப் போன்ற பல போராளிகளும் இரவு வேளைகளில் சற்று பாதுகாப்பாக ஆசுவாசமாக இரவில் நித்திரை கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இதனை 1986 இல் தமிழீழ விடுதலைப் புலிகள் ரெலோ மீதான வலிந்த தாக்குதல் என்பதாக ஆரம்பித்த மனித உரிமை மீறல் என்றாக ஆரம்பித்தில் எம்மிடையே ஒரு வித பாதுகாப்பின்மை எம்மவர்களால் உருவாக்கப்பட்டதாக உணர முடிந்த பாதுகாப்பற்ற நிலமை நிலவியும் வந்தது.

டிசம்பர் 12ம் திகதி உறக்கம் சத்தம் இன்றி வேட்டின்றி கடந்ததாக உணர முடிந்தது. ஆனால் இதற்குள் ஒரு இரத்தம் படிந்து மௌனிக்கப்பட்ட துப்பாக்கிக் கோலைகள் அரங்கேறி இருந்தது என்பதை பிற்பட்ட காலங்களிலேயே அறிய முடிந்தது.

டிசம்பர் 13ம் திகதி காலையில் வழமை போல் ஆறு மணியளவில் தூக்கம் கலைந்து காலைக் கடன்கள் முடித்து மக்கள் பணிக்காக மனித உரிமைகள் தினப் போராட்த்திற்காக வீதியில் இறங்க முற்படுகையில் எனது நெருங்கிய ஒரு ஆதரவாளர் (அவருக்கு மட்டும் தெரிந்த) என் தங்கும் இடத்திற்கு வந்தார்.

‘….மனித உரிமைகள் தினமான இன்று உங்களை புலிகள் இயக்கம் தடை செய்துவிட்டதாக தனது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் சிலர் கதைப்பதாக கூறி என்னை வீட்டினுள் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு தகவல் அறிந்து வருவதாக சென்று விட்டார்.

அரை மணி நேரத்தில் நான் தங்கியிருந்த வீதியினால் வாகனம் ஒன்றில் ஒலி பெருகியை இணைத்து தமிழீழ விடுதலை அமைப்பினர் ஈபிஆர்எல்எவ் அமைப்பை தாம் தம்மை அவர்கள் தாக்குவதற்கு முன்பு தடை செய்து விட்டதாகவும் அதன் உறுப்பினர்கள் தம்மிடம் சரணடையுமாறும் அறிவித்தல்களை செய்து கொண்டு சென்றனர்.

கூடவே எனது பெயர் உட்பட வேறு சிலரின் பெயர்களையும் குறிபிட்டு அவர்களை கைது செய்துவிட்டோம் என்ற அறிவித்தல்களை ஒலி பெருக்கியில் கூறிச் சென்றனர்.

எனக்குள் ஒரு எச்சரிக்கை ஏற்பட நான் வெளியில் கைதாகாமல் இருக்கையில் கைதாகிவிட்டதாக அறிவிப்பது ஒரு வகை உளவியல் பயமுறுத்தல் மனித உரிமை மீறலான வெருட்டல்கள் என்று உணர்ந்து கொண்டேன்….. அன்றை 1986 மார்கழி 13 மனித உரிமை தினத்தில்
விடுதலைப் போராட்டத்தில் நாம் இனம் கண்ட எதிரிகளிடம் இருந்து வந்த மனித உரிமை மீறலை விட இந்த மக்களுக்கான போராடும் உரிமை கருத்துச் சொல்லும் உரிமையை மறுத்த அந்த எம்மில் ஒரு பிரிவினரால் செயற்படுத்தப்பட்ட மனித உரிமை மீறலுக்கு இன்றுவரை பதில் கொடுக்கப்படாமல் 34 வருடங்கள் கடந்து போய்விட்டது.

திம்பு பேச்சுவார்த்தை காலத்தில் போர் நிறுத்தம் சமாதானம் என்றான விடயங்கள் முன்வைக்கப்பட்டாலும் எப்போது இவை நிரந்தரமானது அல்ல என்பதாக உணர்ந்த என்னைப் போன்றவர்கள் தொடரந்தும் பாதுகாப்பை முன்னிட்டு எதிரியிடம் இருந்து எம்மை பாதுகாக்க ஒரு வகை தலை மறைவு வாழ்வைத் தொடர்ந்தது இன்று தமிழீழ விடுதலைப் புலிகளால் இதே மாதிரியான அச்சுறத்தல்கள் கொலைகள் நடைபெற்ற போது எம்மை பாதுகாத்து இன்று வரை உயிர் வாழ்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது.

இதற்கு பின்னரான அரசியலை மனித உரிமை மீறல்கள் ஈழவிடுதலைப் போராட வரலாற்றை தோழர் சிவராஜ மோகன் எழுதி பதிவில் இருந்து இணைக்கின்றேன்…

1986 ஆம் ஆண்டு மார்கழி 13ம் திகதி அமரர் தோழர் பத்மநாபா தலைமையிலான ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை அதன் அரசியல் நடவடிக்கைகளை தடைசெய்யும் இராணுவ நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர்.

தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்ற மகுடத்திற்காக அன்றைய தினம் முன் இரவில் ஆரம்பித்த இத் தாக்குதல் குறிப்பிட்ட ஒரு சில இடங்கள் தவிர எதிர் தாக்குதல் எதுவுமின்றியே முடிவுக்கு வந்தது. புலிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார்கள் என்று சொல்லப்பட்ட கூற்றை இது வலுவற்றதாக்கியது. சமூக விரோத குற்றச்சாட்டை ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் மீது சுமத்த முடியவில்லை.

ஈபிஆர்எல்எவ் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுவதை அறிந்த ஊர் மக்கள் தன்னெழுச்சியாக கீரிமலை, உரும்பிராய், சாவகச்சேரி போன்ற இடங்களில் புலிகளின் அராஜகத்திற்கு எதிராக ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வீதி மறியல் போராட்டமாக பலாலி வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி வெளிப்படுத்தினர்.

ஆனால், நடந்துகொண்டிருந்த மிலேச்சத்தனத்தின் முன்னால் மக்களின் குரலுக்கு மதிப்பிருக்கவில்லை. ஏ 9 வீதிக்கு குறுக்கேயிருந்த மக்களை நோக்கி வாகனம் ஒன்றை வேகமாக செலுத்தி வந்து மோதப்போவதாக அச்சுறுத்தி கலைந்து ஓடச் செய்யப்பட்டனர்.

ஈபிஆர்எல்எவ் முகாம்கள் மீது புலிகள் நடாத்திய தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் தவிர கைது செய்யப்பட்ட, சரணடைந்த பலர் காணாமல் போகச்செய்யப்பட்டனர். இவ்வாறு சரணடைந்தவர்களை காணாமற் போகச்செய்த சிலர் பின்னர் முள்ளிவாய்க்காலில் காணாமல் போகச் செய்யப்பட்ட துன்பியல் சம்பவத்தை தமிழ் சமூகம் காண நேர்ந்தது.

வடக்கு கிழக்கு முழுவதும் ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு முகாம்களில் சிறைவைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் உடல் ரீதியான தண்டனையோடு தினம் தினம் வார்த்தைகளாலும் உளரீதியாக தாக்கப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும், எதிர்காலத்தில் ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் சேர்ந்து அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவாதம் பெறப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர். அரசியலில் ஈடுபட்டால் புலிகள் வழங்கும் தண்டனையை ஏற்றுக்கொள்கிறோம் என பெற்றோரிடமும் கையொப்பம் பெறப்பட்ட பின்னரே நீண்ட நாட்கள் சிறைவைக்கப்பட்டிருந்த பலர் விடுவிக்கப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டும், சரணடைந்தும் தடுத்து வைக்கப்பட்ட ஒரு பகுதியினரே 1987 பங்குனி 30 அன்று வெலிக்கடை சிறை படுகொலையை மேவிய கந்தன் கருணை படுகொலையின் போது பலியாகினர். ஆனால் இவற்றை இயக்க மோதல் என்று தமிழ் கூறும் நல்லுலகம் வகைப்படுத்தி வருவது தான் வேடிக்கை.
புலிகளின் அச்சுறுத்தல்களையும் மீறி பல ஈபிஆர்எல்எவ் உறுப்பினர்கள் மக்களால் பாதுகாக்கப்பட்டு பல நாட்கள் தங்குமிடமும், உணவும் வழங்கி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று விடப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன…..

இவ்வாறு உயர் தப்பியவர்களின் ஒரு சாட்சியாகவும் நான் இருக்கின்றேன்
அவ்வாறு பாதுகாக்கப்பட்ட பலர் இன்றும் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தப்பிப்பிழைத்திருப்பதும் தொடர்ந்தும் தமிழ் பேசும் சமூகத்தின் சுபிட்சமான எதிர்காலத்திற்காக மனித குலத்தின் விடிவிற்காக கைகோர்த்து நிற்பதும் தான் இந்த போராட்டத்தில் தமது உயிரை ஆகுதியாக்கிய, அர்ப்பண உணர்வோடு உழைத்த போராளிகள் அனைவருக்கும், பக்கபலமாய் நின்ற மக்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.

புலிகள் ஆரம்பித்த இந்த அழித்தொழிப்பு நடவடிக்கை அவர்கள் 2009 இல் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்படும் வரை முடிவுக்கு வரவில்லை. பலத்த உயிர் அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட போதும் தோழர் பத்மநாபாவின் வழிவந்தவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் அவர்களால் தடை செய்துவிட முடியவில்லை.

உலகெங்கும் நடைபெற்றுக்கொணடிருக்கும் மனித உரிமை மீறல்கள் அது பாலஸதீனத்தில் ரஸ்யா உக்ரேன் போரில் மத்திய கிழக்கு சிரியா லெபனான் போன்ற இடங்களில் நடைபெறும் பொதுமக்கள் மீதான மனித உரிமை மீறல் என்றாக பலதும் நிறுத்தப்பட வேணடும்.

ஆண்டுகள் பல கடந்தும் ஈழத்தில் காணமல் ஆக்கப்பட்வர்களின் போராட்டம் என்றாக இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் 2009 மே மாதத்தில் இருந்து அல்ல அதற்கு முன்பான 1986 மே மாதம் இருந்து காணமல் ஆக்கப்பட்டவர்கள் அது எம்மவர்களால் என்றாக முழுமைப்படுத்தப்பட வேண்டியது இன்றை 74ம் ஆண்டில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை நினைவு கொள்ளும் நாளில் பிரகடனமாக முன்வைப்போம்

இதனுடன் தற்போது இலங்கையில் ஆட்சியிற்கு வந்திருக்கும் ஜனதா விமுக்தி பெரமுன இன் 1971, 1989 போன்ற ஆண்டுகளில் நடைபெற்ற கிளர்ச்சி அதனைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தினால் காணமல் ஆக்கப்பட்டதாக களனிகளில் தூக்க வீச்சப்பட்ட எங்கள் சிங்கள சகோதர்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கும் குரல் கொடுப்போம் இந் நாளில்.

Leave a Reply