307,369 பேர் பாதிப்பு
6 பேர் உயிருடன் புதைந்தனர்
1919க்கு அழையுங்கள்
பாடசாலைகள் 208 க்கு பூட்டு
நாட்டையே உலுக்கிய தாழமுக்கம், இங்கிருந்து, இந்தியாவின் தமிழ்நாட்டை நோக்கி நகர்வதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருந்த நிலையில், நாட்டில் நிலவியிருந்த சீரற்ற வானிலையால், அரநாயக்கவில் உள்ள சாமசர மலை, மூன்று கிராமங்களுக்குள் சரிந்து, பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரநாயக்க, எலஹபிட்டியவில் உள்ள சாமசர என்ற மலையின் ஒரு பகுதி, மலைக்குக் கீழுள்ள சிறிபுர, எலஹபிட்டிய மற்றும் பல்லேபாகய ஆகிய மூன்று கிராமங்களில் ஆங்காங்கே, சரிந்து படுத்துக்கொண்டுள்ளது.
அந்த மூன்று கிராமங்களுக்குள்ளும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மண்படுக்கையில் சுமார் 150க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டதாகவும் அதில், 80 பேர் நேற்று மாலை வரையிலும் காப்பாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முப்படையினரும் இணைந்தே, இந்த விசேட மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். இந்த நடவடிக்கைக்கு படைத்தரப்பிலிருந்து 170 பேர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடன் கூடிய வானிலையானது, 22 மாவட்டங்களைப் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளதுடன், 72,946 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 307,369க்கும் அதிகமான மக்கள், நிர்க்கதியான நிலைமைக்குள் தள்ளியுள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக, கடந்த மூன்று நாட்களுக்குள் 11 பேர் உயிரிழந்தும் 19 பேர் காயமடைந்தும் உள்ளனர் எனத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மேலும் 6 பேர் காணாமற் போயுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
கடுகண்ணாவ, கோனவல, ரம்மாலக்க கிராமத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரண்டு வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் அவ்வீடுகளில் வசித்து வந்த 6 பேர் காணாமல் போன நிலையில், அவர்களில் மூவர், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
திங்கட்கிழமை (17) நள்ளிரவு ஏற்பட்ட இச்சம்பவத்தில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரே காணாமல் போயுள்ளனர்.
பெண்ணொருவரும் இரு சிறார்களுமே, சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இச்சம்பவத்தில், இரண்டு வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகப்
பொலிஸார் கூறினர்.
இதேவேளை, மண் சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 863 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில்,68 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதேவேளை, அனர்த்தத்துக்கு முகங்கொடுத்த 106,379 பேர், சுமார் 208 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, இந்த சீரற்ற வானிநிலை காரணமாக, கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிராந்தியத்தில், மணித்தியாலத்துக்கு 80 – 90 கிலோமீற்றரை விட அதிக வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற வானிலையால், மேல் மாகாணத்திலுள்ள 200க்கும் அதிகமான பாடசாலைகளுக்கு இன்று புதன்கிழமை முதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது இவ்வாறிருக்க கண்டி, பன்வில பகுதியில் உள்ள பாடசாலைகளில் 8 பாடசாலைகள் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள பாடசாலைகள் யாவும், மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அரச அதிகாரிகள் அல்லது பிரதிநிதிகள் சமூகமளிக்காதிருந்தால், அவை தொடர்பில் 1919 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புத்தளம், தப்போவ தம்பபன்னிய கிராமத்தில், வெள்ளத்தில் சிக்குண்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேரை, முப்படையினரும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இணைந்து மீட்டுள்ளனர். இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு, இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
இதேவேளை, இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் யாவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று காலைவரையிலும் தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக படையினர் அறிவித்தனர்.
நவீன தொழிற்நுட்பங்களுடன் கூடிய இயந்திர வசதிகள் இன்மையினால், எதிர்கால வானிலை அவதானிப்புகளை மிகமிக துல்லியமாக அறிவிக்கமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால, நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.