சமஷ்டி முறையானது, நாட்டைப் பிரிப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், சமஷ்டியை முதலில் முன்வைத்தவர்கள் சிங்களத் தலைவர்களேயாவர். தமிழர் இந்த நாட்டின் தேசிய இனத்தவர். அவர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும். அதற்கு நாட்டுக்குள் சமஷ்டித் தீர்வு அவசியமானது’ என்று வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வடமாகாண சபையால் உருவாக்கப்பட்ட தீர்வுத்திட்ட முன்மொழிவு, கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (24) கையளிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், ‘இலங்கையை வட-கிழக்கு, மத்தி மற்றும் கரையோரம் என மூன்று பிராந்தியமாகப் பிரிக்கும் யோசனை 1930இல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், சமஷ்டியைத் தமிழ் மக்கள் 1949ஆம் ஆண்டிலிருந்து தான் கேட்கத் தொடங்கினர்’ என்றார்.
‘தந்தை செல்வா எனப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில், தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டிருந்தால் பிரபாகரன் வந்திருக்கமாட்டார். அதுபோல வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காலத்திலேயே பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் என்ன நடக்கும் என்பதை வரலாற்றைப் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
வடமாகாண சபையின் தீர்வுத் திட்டத்துக்கு, வடமாகாண சபையிலுள்ள சிங்கள உறுப்பினர்கள் ஆதரவு தரவில்லை. அவர்கள் சமஷ்டியையும் வடக்கு – கிழக்கு இணைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தும், அவர்கள் சிங்களப் பேரினவாதத்துக்கு அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.
போர்க்குற்ற விசாரணை மூலம், உண்மை கண்டறியப்பட்ட பின்னரே, தேசிய நல்லிணக்கம் பற்றிப் பேச முடியும். அதன் பின்னரே அதனை உருவாக்க முடியும். தமிழர்களின் தாயகம் பிரிக்கப்பட முடியாதது. உலகத்தில் இல்லாத அதிகாரத்தை நாங்கள் கேட்கவில்லை. சமஷ்டி என்பது பிரிவினை எனக்கூறி, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், முதலமைச்சர் சி.வி. ஆகியோர் மீது இனவாதப் பிரசாரம் முன்னெடுக்கப்படக் கூடாது’ என்றும் அவர் மேலும் கூறினார்.
உண்மை சிவாஜிலிங்கம் அவர்களே இந்த சமஷ்டியை தேவை இல்லை என்று கடைசியாக கருணாவை துரோகியாக்கியது பிரபாகரன் என்றும் இதற்கு முதல் சந்திரிகாவின் சமஷ்டிக்கு மேலான பொதியை இல்லாமல் செய்தது பிரபாகரனின் வழிகாட்டலின் படி சம்மந்தர் கோஷ்டி என்றும்(அதுதான் உங்கள் தற்போதைய ஏக தலைவர்) கூடவே பேசியிருந்தால் நல்லா இருந்திருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்