‘பீப் பாடல்’தொடர்பான புகாரில் நடிகர் சிம்புவை கைது செய்ய போலீஸார் 3 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். நடிகர் சிம்பு பாடிய ‘பீப் பாடல்’ யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் சிம்புவை கைது செய்ய தடை விதிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து சிம்புவை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சிம்புவிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்றபோது, அவர் அங்கு இல்லை என்பது தெரிந்தது. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹைதராபாத் அல்லது கேரளாவில் அவர் இருக்கலாம் என்று தெரிகிறது. முன்ஜாமீன் கிடைக்கும் வரை தலைமறைவாக இருக்க அவர் திட்டமிட்டிருக்கலாம் என்று நினைக்கிறோம். அதற்கு முன்பே அவரைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார்.