பயங்கரமானதொரு வாயுத் தாக்குதலிலிருந்து சிரிய அரசாங்கத்தைப் பாதுகாக்க ரஷ்யா முயல்வதாக, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், நேற்று (11) குற்றஞ்சாட்டியுள்ளது.சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கான ரஷ்யாவின் ஆதரவைக் கண்டிக்கின்ற மேற்குலகத்தின் செய்தியொன்றை, ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்சன், நேற்று ரஷ்யாவுக்கு எடுத்துச் சென்றுள்ள நிலையிலேயே, ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தின் மேற்படி குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
சிரியப் பிரச்சினையைக் கையாளுவதற்கான உத்தியொன்றைக் கொண்டிருக்கவில்லை என விமர்சிக்கப்படுகின்ற ஐ. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சிரியாவுக்குள் செல்லும் எந்தத் திட்டங்களும் இல்லை என்றவாறான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், தம்மை அடையாளங்காட்ட விரும்பாத சிரேஷ்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் முன்னேற்றங்களை நிகழ்த்துகின்ற எதிரணியினர் மீது அழுத்தங்களை வழங்குவதற்காகவே, சிரிய ஜனாதிபதி அசாட்டின் அரசாங்கத்தினால், சிரியாவின் இட்லிப் மாகாணத்தில், பொதுமக்கள் மீது இம்மாதம் நான்காம் திகதி வாயுத் தாக்குதல் நடாத்தப்பட்டு, பல சிறுவர் உள்ளடங்கலாக 87 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், சிரிய ஜனாதிபதி அசாட்டின் படைகள்தான் தாக்குதலை நடத்தின என்ற ஐக்கிய அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கெதிராக, சிரிய ஜனாதிபதி அசாட்டை நியாயப்படுத்திய ரஷ்யா, சிரிய ஜனாதிபதி அசாட்டின் படைகள்தான் தாக்குதல் நடத்தின என்பதற்கு எந்தவோர் ஆதாரமும் இல்லை என்று கூறியதுடன், இத்தாக்குதலுக்காக, சிரிய எதிரணியினரை சாடியிருந்தது.
இந்நிலையில், “அங்கு நடந்தது என்பதை மறைக்க ரஷ்யா மறைக்க முயல்கிறது என்பது தெளிவானது” என்று வெள்ளை மாளிகை அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
இதேவேளை, கருத்துத் தெரிவித்துள்ள, ஐக்கிய நாடுகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர நிக்கி ஹேலி, இரசாயனத் தாக்குதலை ரஷ்யா முன்னரே அறிந்திருந்தது என்று தான் நினைப்பதாக, நேற்று கூறியுள்ளார்.