தாய்லாந்தின் குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்களையும் அவர்களின் கால்பந்தாட்டப் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கை, நேற்று முன்தினம் (10) வெற்றிகரமாக நிறைவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து முழுவதும், நேற்று (11) கொண்டாட்டமான நிலைமையே நிலவியது.
18 நாட்களாகக் குகையில் சிக்கியிருந்த மாணவர்களையும் பயிற்றுநரையும் மீட்கும் நடவடிக்கையின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம், இறுதி 4 சிறுவர்களும் பயிற்றுநரும் மீட்கப்பட்டனர். இருளான குகையில் பல நாட்களை இச்சிறுவர்கள் கழித்திருந்தாலும், உடல், உள ரீதியாக அவர்கள் நலமாக உள்ளனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுச் சுகாதார அமைச்சின் கண்காணிப்பாளர் நாயகம் தொங்சாய் லேர்ட்விரைரட்டனபொங், அவர்கள் ஒன்றாக, அணியாக இருந்தமையாலும் ஒருவருக்கொருவர் உதவியமையாலும், அவர்கள் இவ்வாறு நலமாக இருந்திருப்பர் என்று குறிப்பிட்டார். அத்தோடு, சிறுவர்களைத் திடமாக வைத்திருந்தமைக்காக, பயிற்றுநருக்கும் விசேடமான பாராட்டுகளை அவர் வெளிப்படுத்தினார்.
இந்த மீட்பு நடவடிக்கையின் முதலாவத நாளன்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்கப்பட்ட 4 சிறுவர்களில் சிலர், அவர்களது பெற்றோரைப் பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு முன்பாக, சில நூற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் நேற்று ஒன்றுகூடி, அங்கு நின்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இன்னும் சில நாட்களுக்கு, அச்சிறுவர்கள் வைத்தியசாலையிலேயே தங்க வைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான பரீட்சைகள், விரைவில் இடம்பெறவிருந்த போதிலும், அவர்களுக்கு அதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.