இந்நிலையில், அசாம் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் துவங்கிய ரைஜோர் தள கட்சியின் சார்பாக சிவ்சாகர் தொகுதியில் போட்டியிட்டார் அகில் கோகாய்.
அகில் கோகாய்க்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்படாத நிலையில் சிறையில் இருந்ததால், அவரது 85 வயதான தாய் பிரியாடா கோகாய் முன்நின்று தேர்தல் பணியாற்றினார்.
சிறையிலிருந்தபடி மக்களுக்கு கடிதம் எழுதிய அகில் கோகாய், “அசாம் காப்பாற்றப்பட வேண்டுமானால் பா.ஜ.க-வுக்கோ குடியுரிமைச் சட்டத்தை ஆதரிப்பவர்களுக்கோ வாக்களிக்க வேண்டாம்.” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மேலும், தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் வழங்குவோம் என்றும், பா.ஜ.க-வில் இணைந்தால் தேர்தலில் போட்டியிட்டு பா.ஜ.க அமைச்சராகலாம் என்று ஆசைகாட்டப்பட்டதாகவும், மறுத்ததாலேயே ஜாமீன் மறுக்கப்பட்டதாகவும் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில் 57,173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார் அகில் கோகாய். எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சுபமித்ரா கோகாய் 45,394 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பா.ஜ.க வேட்பாளருக்கு பிரதமர் மோடியே தேர்தல் பரப்புரை செய்த நிலையில், அகில் கோகாய் சிறையிலிருந்ததால் ஒருநாள் கூட நேரடியாக பரப்புரை செய்யாமலேயே வெற்றி பெற்றுள்ளார்.
(கலைஞர் செய்திகள்)