சிலி நாட்டில் கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த மாபெரும் போராட்டம் நாட்டையே உலுக்கியது. தரமான கல்வி, உதவி தொகை அதிகரிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்நிறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. சிலி அரசுக்கு எதிரான தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தவர்களில் முக்கிய நபரான போரிக் தான் தற்போது அந்நாட்டின் புதிய அதிபர். இந்த போராட்டம் தான் தற்போது பதவியிலிருந்து வெளியேறும் அதிபர் செபாஸ்டியன் பெனெரா அரசியல் அமைப்பையே மாற்றி அமைக்கும் வாக்கெடுப்பு நடத்தும் நிலையை உருவாக்கியது.
பெரும்பான்மையான சிலி மக்கள் இந்த வாக்கெடுப்பில் புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க ஆதரவு அளித்தனர். புதிய அரசியல் அமைப்பு வரும் 2022 ஆம் ஆண்டு மத்தியில் உருவாக்கப்பட்டு வாக்களிப்புக்கு விடப்படவுள்ளது.
செபாஸ்டியன் பெனெராவின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து சிலியில் அதிபருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தீவிரமான போராட்டங்களால் இளைஞர்களின் அபிமானத்தையும், ஆதரவினையும் பெற்ற முன்னாள் மாணவர் தலைவர் கேப்ரியல் போரிக்கை இடதுசாரி கட்சி களத்தில் இறக்கியது. வலதுசாரி தரப்பில் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் என்பவர் போட்டியிட்டார்.
பொது சுகாதார அமைப்பு, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, பெரும் செல்வந்தர்களுக்கு அதிகவரி, தனிநபர் உதவித்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட போரிகின் தேர்தல் வாக்குறுதிகள் இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றது. பரபரப்பான தேர்தல் பரப்புரைகளை அடுத்து சிலி அதிபருக்கான தேர்தல் நடைபெற்று, முடிவுகள் ஞாயிறு அறிவிக்கப்பட்டன. இதில் 55. 87% விழுக்காடு வாக்குகள் பெற்று சிலியின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார் கேப்ரியல் போரிக். கேப்ரியல் போரிகின் வெற்றியை நாடுமுழுவதிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சாலைகளில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிலியின் தேசிய கொடிகளை ஏந்திய படி ஆடிப்பாடினர். போரிக்- கை எதிர்த்து போட்டியிட்ட வலதுசாரி தலைவர் ஜோஸ் ஆண்டோனியோ காஸ்ட் 44% வாக்குகளை பெற்றிருந்தார். கேப்ரியல் போரிக் வரும் 2022 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி சிலி நாட்டின் அதிபராக முறைப்படி பதவி ஏற்க உள்ளார். அரசியலில் தீவிரம் காட்டி வந்ததால் கேப்ரியல் போரிக் சட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை. இன்னும் திருமணம் ஆகாத அவருக்கு ஐரீன் என்ற காதலி இருப்பது குறிப்பிடத்தக்கத்து.