மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரனின் கைது உட்பட, இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, மன்னார் மாவட்டத்திலிருந்து, வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட, இலங்கைத் தமிழரசுக் கட்சி சேர்ந்த சுப்பிரமணியம் சிவகரன், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் இன்று மதியம் கைதுசெய்யப்பட்டு, கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்பதை அறிந்து, நாம் ஆழ்ந்த கரிசனை கொண்டுள்ளோம்.
இந்தக் கைது மாத்திரமல்லாமல், கடந்த சில நாட்களில் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பல உத்தியோகபூர்வமான கைதுகளாக இல்லாமல், கடத்தப்பட்டுப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றமையானது, மிகவும் பாரதூரமான ஒரு விடயமாகக் காணப்படுகிறது.
இன்றைய கைது உட்பட இவ்வாறு முறைகேடான விதத்தில் இடம்பெறும் கைதுகள் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்குக் கொள்ளும் அதேவேளை, சம்பந்தப்பட்ட தரப்பினர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
புலிகளின் முக்கியஸ்தர் ராம் இன் கைதும் அவர்வழங்கிவரும் வாக்கு மூலமும் தற்போது நடைபெற்றுவரும் கைத்துகளின் பின்னணியில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.