‘வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டுக்கும், 2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதிக்குப் பின்னர், ஒரு வகையான நோய் தொற்றிக் கொண்டுள்ளது’ என்று, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பி.யான விமல் வீரவன்ச தெரிவத்தார்.
நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், நேற்றுப் புதன்கிழமை (25) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
‘அழைப்பில்லாத வைபவத்துக்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர், அங்கு, கடற்படையின் உயரதிகாரியை மோசமாகத் திட்டியுள்ளார். இது, படையினரை அவமதிக்கும் செயலாகும்.
வடமாகாணமுதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், படையினரை, வடிகான்களைச் சுத்தப்படுத்துமாறு கோரியுள்ளார். இவையெல்லாம், மதிக்கவேண்டிய படையினரை அகௌரவப்படுத்தும் செயற்பாடாகும்.
கிழக்கு முதலமைச்சர் நடந்துகொண்ட கேவலமான செயற்பாட்டுக்காக, பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். அத்துடன், அரசாங்கத்தால் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
படையினரை நினைவுகூர்வதை நிறுத்தவே வெற்றி விழாவை நிறுத்தினர். ஆனால், இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதன் மூலம், அவர்கள் இயற்கையாகவே ஞாபகப்படுத்தப்பட்டு விட்டனர்’ என்றார்.
‘நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, தாக்கப்பட்டவரும் தாக்கியவரும் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், குறைநிரப்புப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பெறுபேறு, தவறானது. அப்பெறுபேற்றை அறிவித்தவருக்கும் செயலாளர் நாயகத்துக்கும் எவ்விதமான தண்டனையும் வழங்கப்படவில்லை.
ஆகையால் நான், செங்கோலுக்கும் சபாநாயகருக்கும் மரியாதை செலுத்துவது தொடர்பில், சிந்திக்க வேண்டியுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்தார்.