நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்கள் குறித்த தனது பதிவால் வெடித்த சர்ச்சையை அடுத்து, மனநல மருத்துவர் ஷாலினி விளக்கம் அளித்துள்ளார்.நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து நிற்கிறது. 20 தொகுதிகளில் கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். பெண்களுக்கு சம உரிமை என்ற வகையில் நாம் தமிழர் கட்சி முன்னுதாரணத்துடன் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதற்கிடையே ”இனிமையாகப் பேசும் ஆண்களால் பெண்கள் ஈர்க்கப்படுவது மனித இனத்துக்கே உரிய அவலம்” என்று மனநல மருத்துவர் ஷாலினி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் பெண் வேட்பாளர்கள் அடங்கிய புகைப்படத்தையும் அதில் பகிர்ந்திருந்தார்.
அவரின் கருத்துக்குக் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், #ShameonyouShalini உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷாலினி, ”ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக falling for என்றால் காதலிப்பது மட்டுமல்ல, ஒரு உத்தியையோ, ஜோக்கையோ உண்மை என்று நம்புவதும் அதில் சேர்த்திதான்.
உதாரணத்துக்கு: How could you fall for such an obvious trick?
ஆங்கில அகராதியைப் படிக்காமல்
1) ‘ஷேம் ஆன் யூ ஷாலினி’ என்று சொல்லுவதும்,
2) முதலில் நீங்கள் போய் பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று சொல்லுவதும்,
3) என் உதவியாளருக்கு போன் செய்து பிதற்றுவதும்
4) சம்பந்தமே இல்லாமல் யார் யாரையோ இதில் கோர்த்து விடுவதும், இப்படியான இன்ன பிற சதிகளும் உச்சகட்ட அறியாமை. அதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.