பொதுவாகவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வரலாற்றுக்காலம் முதலே இருதரப்பு உறவுகள் வலுவாக இருந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியான போக்கே தற்போதும் காணப்படுகின்றது. குறிப்பாக இந்திய மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் சிறப்பாகவே உள்ளது. இன்றைய காலத்தில் அந்த பிணைப்பு மென்மேலும் வலுவானதான ஒன்றாகவே மாறிக்கொண்டிருக்கின்றது. தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் தற்போது மேம்பட்டுச் செல்கின்றன.
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் நான் சந்தித்துள்ளேன். அவர்களும் நல்லெண்ண சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். அத்துடன் தற்போது யாழ். நூலகத்திற்கு நூல்களை வழங்கும் அறிவிப்பினையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விடயம் ஆகும்.
பொதுவாகவே அவர்கள் பல்வேறு விடயங்களில் கரிசனைகளை காட்டுகின்றார்கள். இருதரப்பு உறவுகள் நன்றாகவே உள்ளன. எதிர்காலத்தில் அவை மென்மேலும் அனைத்து மட்டங்களிலும் நெருங்கிய தொடர்புகளாக மாற்றமுறும் என்பதே எனது எதிர்பார்ப்பாகவுள்ளது. இலங்கையில் அசாதாரண சூழல் நிலவிய காலத்தில் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் இந்தியாவிற்கு வருகை தந்திருந்த இலங்கை மக்களில் தற்போது வரை 61,671 வரையிலானவர்கள் 107 முகாம்களில் தங்கியுள்ளார்கள். முகாம்களுக்கு வெளியில் 30 ஆயிரம் பேர் வரையிலானவர்கள் வசிக்கின்றார்கள்.
இதனைவிடவும் அண்மைய காலங்களில் படிப்படியாக சுய விருப்பின் பிரகாரம் 10 ஆயிரம் வரையிலானவர்கள் நாடு திரும்பியுள்ளார்கள். இது வரையில் தமிழகத்தில் தங்கியுள்ள அகதிகளை மீளவும் அழைத்துக் கொள்ளும் நோக்கிலான சிறப்பு மீள்குடியேற்ற பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவில்லை. தற்போதைய நிலையில் அவர்கள் தமது சுய விருப்பின் அடிப்படையில் கட்டம் கட்டமாக திரும்பி செல்கின்றனர். இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கைப் பிரஜைகள் எவரும் நாட்டினை விட்டு வெளியில் சென்று வசிப்பதற்கும் அது போலவே மீண்டும் நாட்டிற்கு திரும்பி வந்து வசிப்பதற்கும் உரிமை உடையவர்களாக இருக்கின்றார்கள்.அதன்பிரகாரம் மீண்டும் நாட்டுக்குத் திரும்பி செல்வதற்கு விரும்புவர்கள் அங்கு சென்று குடியேறுகின்றார்கள். இன்னும் பலர் மீண்டும் நாடு திரும்புவதற்குரிய எதிர்பார்ப்பில் சில முன்முயற்சிகளை செய்து கொண்டு இருக்கின்றனர். இதனை விடவும் பெரும்பாலான மக்கள் தமது பொருட்கள் அனைத்தினையும் தாம் நாடு திரும்பும் போது மீளவும் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகின்றார்கள். விமான சேவையில் பொதிகளுக்கான நிறை வரையறுக்கப்பட்டுள்ளமையால் அவர்களால் தமது உடமைகளை முழுவதுமாக கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.
ஆகவே கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டால் அப்போது திரும்பலாம் என்ற எண்ணத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் இலங்கையில் தற்போதும் மீள்குடியேற்றத்தினை முன்னெடுப்பதற்கான அமைச்சானது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
பல திட்டங்களை முன்னெடுப்பதாக அறிகின்றேன்.