பிரபல எழுத்தாளரும், ஒய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியுமான செங்கைஆழியான் என அழைக்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா யாழ்ப்பாணம் பிரௌன் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 75ஆகும். புவியியல்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற குணராசா புவியியல் பாடநூல்கள் பலவற்றை எழுதியதுடன் பல தொடர்கதைகள், நாவல்கள், சிறுகதைகள் என ஆக்க இலக்கியங்களையும் படைத்துள்ளார். வீரகேசரி வெளியீடாக வெளிவந்த வாடைக்காற்று நாவல் பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. அது தவிர சிரித்திரன், வீரகேசரி தினகரன் ஆகியவற்றில் தொடர்கதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி வெளியீடாக 10க்கு மேற்பட்ட இவரின் நாவல்கள் வெளியாகியுள்ளன. இறுதியாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராகவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பதிவாளராகவும் இவர் பணியாற்றினார்.