சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளதாக கூறி, அவரது மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அமர்விலிருந்து நீதிபதி சக்திவேல் விலகினார். இதையடுத்து, வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை சார்பில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து, செந்தில்பாலாஜி சிகிச்சைப் பெற்று வரும் ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி நேரில் சென்று செந்தில்பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, நீதிபதியிடம் அமலாக்கத் துறை சார்பில் நீதிமன்ற காவலில் வைக்க கோரி வலியுறுத்தப்பட்டது. அதேபோல், செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம். எனவே அவரை நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று திமுக வழக்கறிஞர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த நீதிபதி, அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நலம் குறித்த விவரங்களையும், அமலாக்கத் துறை மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர்களின் தரப்பு கோரிக்கைகளையும் கேட்டதன் பின்னரே மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.