ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை வரவேற்கும் அதேவேளையில், இலங்கைப் பிரஜைகளுக்கு அவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை எதிர்பார்ப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் X தளத்தில் இட்டுள்ள ஒரு பதிவில், “இலங்கையின் ஜனநாயகத்திற்கான நீண்டகால உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தும் தேர்தல் ஆணையத்தினால் விடுக்கப்பட்டுள்ள செப்டம்பர் 21 ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். இலங்கை குடிமக்களை தீர்மானிக்க அதிகாரம் அளிக்கும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிடும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வகையில் கட்டுப்பணம் செலுத்துவதற்காக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் இன்று (26) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தார்.
எனினும் கட்டுப்பணம் செலுத்துவதற்கான பணத்தை பத்தரமுல்லை விகாரையில் விட்டுவிட்டு வந்ததால் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சென்று தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தவுள்ளதாக பத்தரமுல்லை சீலரத்தன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் கீர்த்திரத்ன கட்டுப்பணத்தை வௌ்ளிக்கிழமை (26) காலை செலுத்தினார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான உறுதிமொழியை சமர்ப்பித்த முதலாவது வேட்பாளர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டவர்.