” ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களுடன் டெல்லிக்கு வந்த அந்தப் பெண் பயணி கூறுகையில், “கடந்த வெள்ளிக்கிழமையன்று காலை 6.30 மணியளவில் திடீரென சைரன் ஒலித்தது. அந்த சத்தம் கேட்டுதான் நாங்கள் தூக்கத்திலிருந்து விழித்தோம். அது போர் அபாய சைரன் எனப் புரிந்தது. அதைக் கேட்டதும் நான் எனது கைக்குழந்தையுடன் பதுங்கிடத்தை நோக்கி ஓடினேன். பாதுகாப்பான இடத்துக்குச் செல்வதற்கு சற்று கடினமாகவே இருந்தது. இருப்பினும் எப்படியோ சமாளித்துச் சென்றுவிட்டோம். இந்தியா திரும்பியுள்ள இந்தத் தருணத்தில் நான் நிம்மதி அடைகிறேன். எங்களைப் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
சுபம் குமார் என்ற மாணவர் கூறுகையில், “நாங்கள் இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். போர் பதற்றம் தொடங்கியவுடனே எங்கள் (மாணவர்கள்) மத்தியில் பயம் தொற்றிக் கொண்டது. அப்போதுதான் எங்கள் அனைவரின் மொபைல் எண்ணுக்கும் இந்தியத் தூதரகத்தில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதைப் பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். தொடர்ந்து அவர்கள் எங்களுக்கு வழிகாட்டிக் கொண்டே இருந்தார்கள். அதனால் எங்களுக்கு நம்பிக்கை துளிர்த்தது. பின்னர் நாங்கள் பத்திரமாக நாடு திரும்ப தூதரம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது. இதோ நாடு திரும்பியுள்ளோம்” என்றார்.
இன்று வந்தடைந்த விமானத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரும் டெல்லியில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு விமானம் மூலம் அழைத்து வரப்படுகின்றனர். பிற்பகலில் அவரவர் பகுதிக்கு சென்றடைவர் எனத் தெரிகிறது.
இந்நிலையில் காசாவில் வசிக்கும் 10.1 லட்சம் பாலஸ்தீனியர்களும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தெற்கு நோக்கிச் சென்றுவிடுவது நல்லது என்று இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தவுள்ள சூழலில் இஸ்ரேல்ஐ.நா.விடம் 10.1 லட்சம் மக்களை காசாவின் தெற்குக்கு அப்புறப்படுத்துமாறு கோரியுள்ளதாக ஐ.நா. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.