சொகுசு கப்பலுக்குள் வைரஸ் தொற்று

இந்த ராட்சத சொகுசு கப்பலில் அதிநவீன சொகுசு அறைகள், பிரமாண்ட நீச்சல் குளம், திரையரங்கம், நூலகம், கேசினோ உள்ளிட்ட சகல வசதிகளும் அமைக்க பெற்றுள்ளது.

உலகில் உள்ள சொகுசு கப்பல்களில் மிகவும் ஆடம்பரமான சொகுசு கப்பல் என குயின் மேரி 2 வர்ணிக்கப்படுகிறது. மேலும் இதனை மிதக்கும் சொர்க்கம் என சொல்லும் அளவுக்கு மிகவும் புகழ் பெற்றதாக விளங்குகிறது.

இந்த சொகுசு கப்பல், கரீபியன் தீவு நாடுகளில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் வழியாக இங்கிலாந்தின் சவுத்ஹாம்டன் நகருக்கு இயக்கப்பட்டது. இந்த கப்பலில் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், கப்பல் கெப்டன் உட்பட 1,200க்கும் மேற்பட்ட சிப்பந்திகள் பயணித்தனர்.

அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக அந்த சொகுசு கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென கப்பலில் இருந்த பலருக்கு ‘நோரோ’ என்னும் வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த தொற்று பாதிப்பால் பயணிகளுக்கு வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. 

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி சொகுசு கப்பலில் உள்ள 250 சுற்றுலா பயணிகளுக்கும், 20 சிப்பந்திகளுக்கும் இந்த நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் எளிதில் பரவக்கூடியது என்பதும், மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்ளாதபட்சத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் உண்டு என தெரிவித்துள்ளனர். 

தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply