5 Jun, 2023, 6:52 pm
நாடு முழுவதும் உல்லாசப் பயணத்தைத் தொடங்க இந்திய மத்திய அரசு முன்னெடுத்துள்ள தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கை நோக்கிச் செல்லும் இந்தியாவின் முதல் சர்வதேச கப்பல் பயணத்தை கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
எம்வி எம்பிரஸ் என்ற சொகுசுக் கப்பல் புதன்கிழமை இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அடைந்து, நாட்டின் வடகிழக்கு கடற்கரையில் திருகோணமலையையும், யாழ்ப்பாண மாவட்டத்தில் காங்கேசன்துறைக்கு வந்து சென்னைக்குத் திரும்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சொகுசு கப்பலில் நீச்சல் குளங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பல சிறப்பு வசதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் 17.21 கோடி ரூபா செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச முனையம் எம்வி எம்பிரஸ் கப்பல் பயணத்துடன் செயல்படத் தொடங்கும் என திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சோனோவால்,
“இந்தியாவில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு மகத்தான வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் மோடி எங்களிடம் கூறி வருகிறார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், துறைமுகங்கள் அமைச்சகம் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது,” என்று அமைச்சர் கூறினார்.
சென்னையில் இருந்து ஒரு சர்வதேச கப்பல் கொடியசைத்து அனுப்பப்பட்டது இதுவே முதல் முறை என்றும் அமைச்சர் கூறினார். இது உலக அளவிலும் ஒரு தொடக்கமாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.