இந்த விடயம் தொடர்பாக 2022 டிசம்பர் மாதம் 20 ஆம் திகதியிடப்பட்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் சகல நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023 ஜனவரி 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், எந்தவொரு நபரினதும் சேமிப்பு, நிலையான வைப்புகளின் மீது வழங்கப்படும் வட்டிப் பணத்தின் மீது, சில விதிவிலக்குகள் தவிர்ந்த நிலைகளில், 5 சதவீதம் வட்டியை அறவிடுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் தெளிவற்ற தன்மை நிலவுகின்றமையை த வாணிபம் அறிந்து கொண்டது. குறிப்பாக, இந்த வரி விதிப்பனவு தொடர்பில் அண்மையில் நிதி இராஜாங்க அமைச்சரினால் சிரேஷ்ட பிரஜைகளுக்கு சலுகை வழங்கப்படுவது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம், சிரேஷ்ட பிரஜைகளுக்கு நிலையான வைப்புகளிலிருந்து கிடைக்கும் மாதாந்த வட்டித் தொகை ரூ. 100,000க்கு குறைவாக இருக்குமாயின், அவர்களிடமிருந்து இந்த 5சதவீத வரி விதிப்பனவை அறவிடப்படாமலிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
இந்த அறிவித்தலைத் தொடர்ந்து, இந்த வரி விதிப்பனவு நிலையான வைப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டிக்கு மாத்திரம் அறவிடப்படவுள்ளதாக மக்கள் மத்தியில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் முன்னணி அரச மற்றும் தனியார் வங்கிகளின் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, இந்த வரி அறவீடு, சிறுவர் சேமிப்புகள் கணக்குகள் அடங்கலாக, அனைத்துவிதமான சேமிப்பு வைப்புக் கணக்குகள் மற்றும் நிலையான வைப்புகள் மீது கிடைக்கும் வட்டிக்கும் பொருத்தமானதாக அமைந்திருக்கும் எனத் தெரிவித்தனர்.
ஜனவரி 1ஆம் திகதி முதல் இந்த வரி விதிப்பனவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து திரளும் வட்டிக்கு இந்த 5சதவீத வரி விதிப்பனவு வங்கியினால் சுயமாக அறவிடப்படும். இது தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு தமது மாதாந்த கணக்கு மீதிகளை சரிபார்க்கும் போது, இந்த அறவீடு பற்றி அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இவ்வாறான நடைமுறை இதற்கு முன்னர் பதவியிலிருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், குறித்ததொரு தனியார் வங்கியினால் டிசம்பர் மாதத்துக்குரிய வட்டியின் மீது இந்த நிறுத்தி வைக்கப்பட்ட வரி அறவீடு மேற்கொள்ளப்பட்டிருந்ததாக அவ்வங்கியின் வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பில் ஆராய்ந்த போது, குறித்த வங்கியினால் டிசம்பர் மாதத்துக்கான வழங்கப்பட்ட வட்டித் தொகை, வாடிக்கையாளர்களின் கணக்கில் 2023 ஜனவரி 1ஆம் திகதி வைப்புச் செய்யப்பட்டு, அத்தொகை மீது 5சதவீத வரி அறவிடப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
ஜனவரி மாதம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமது டிசம்பர் மாத வட்டித் தொகையின் மீது ஜனவரி மாதத்தில் வரி அறவிட்டிருந்தமை தொடர்பில் குறித்த வங்கியின் வாடிக்கையாளர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.
இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியின் வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு வினவிய போது, சம்பந்தப்பட்ட வங்கிக் கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட கிளையுடன் தொடர்பு கொண்ட போது, தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுவரையில் இந்த விடயத்தை தெளிவுபடுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கும் உங்கள் வங்கிகளுடனான சேமிப்புக்கணக்குகளின் மீது இவ்வாறான வரி அறவீடுகளுடன் தொடர்புடைய அனுபவங்கள் இருந்தால், எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனையவர்களை தெளிவுபடுத்துவதற்கு அது உதவியாக அமையும்.