ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் யாவும், தேர்தல்கள் செயலகம், தெரிவத்தாட்சி அலுவலகங்களிலிருந்து இன்று (15) காலை முதல் அனுப்பிவைக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏனைய ஜனாதிபதித் தேர்தல்கள் போலன்றி, இம்முறை தேர்தலில், ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் எவருமே போட்டியிடவில்லை. எனினும், கடந்த ஜனாதிபதித் தேர்தல்களை விடவும், ஆகக் கூடியளவான 35 வேட்பாளர்கள், இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.
ஆகையால் வாக்குச்சீட்டின் நீளம் 26 அங்குலமாகியுள்ளது. என்பதுடன், வாக்களிப்பு நேரம், மாலை 5 மணிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த கால தேர்தல் வாக்களிப்புகள் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 16ஆம் திகதி நாளை சனிக்கிழமை இடம்பெறும் வாக்களிப்பில், வாக்களிப்பதற்கு, 15,992,096 பேர் வாக்களிப்பதற்கு தகுதிப்பொற்றுள்ளனர்.
வாக்களிக்க செல்வோரின் வசதிகளை கருத்திற்கொண்டு, தூரப்பிரதேசங்களிலிருந்து சொந்த இடங்களுக்குச் செல்வோருக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கை போக்குவரத்து சபை மேற்கொண்டுள்ளது.
நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்ட விசேட போக்குவரத்துச் சேவைகள், நவம்பர் 17,18 மற்றும் 19ஆம் திகதிகளிலும் முன்னெடுக்கப்படும்.
ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளில், ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய அமைப்பு உட்பட சர்வதேச இயக்கங்களும், பல நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு இவர்கள் விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வாக்குச்சீட்டு இம்முறை நீளமானது என்பதனால், வாக்காளர் ஒருவர், தன்னுடைய வாக்கை அளிப்பதற்கு ஆகக் குறைந்து 3 நிமிடங்கள் எடுக்கும். ஒருமணிநேரத்துக்குள் 200 வாக்குகளை மட்டுமே அளிக்கமுடியுமென கண்காணிப்புக்குழுக்கள் அறிவுறுத்தியுள்ளன.
ஆகையால், மாலை வரையிலும் காத்திருக்காமல், காலைவேளையிலேயே சென்று, தங்களுடைய வாக்குகளை அளித்துவிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவும், கண்காணிப்பு குழுக்களும், அரசியல் கட்சிகளும், மக்களின் நல்சார் அமைப்புகளும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.