புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணி, அரசமைப்புக்கு விரோதமான செயற்பாட்டுக்குத் தம்மால் ஆதரவளிக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பில், கொழும்பு-07லுள்ள, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஜனாதிபதியை நேற்று (07) சந்தித்தது.
இந்தச் சந்திப்பில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன், அக்கூட்டணியின் எம்.பிக்களான திகாம்பரம், வே.இராதாகிருஸ்ணன், அ.அரவிந்தகுமார், மயில்வாகனம் திலகராஜ் மற்றும் வேலுகுமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பையேற்று, ஜனாதிபதியை சந்தித்தாகத் தெரிவித்துள்ள கூட்டணி, இந்தச் சந்திப்பின் போது ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பைத் தாம் முற்றுமுழுதாக நிராகரித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மிகவும் சுமூகமானமுறையிலேயே இடம்பெற்றது. புதிய அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுமாறு, ஜனாதிபதி இதன்போது அழைப்புவிடுத்தார் என்று தெரிவித்துள்ள மனோ கணேசன் எம்.பி, அழைப்புக்கு நன்றி தெரிவித்து, அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலின் போது, தான் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உறுப்பினர்கள் பாரியளவில் அர்ப்பணித்தோம். வடக்கு, கிழக்கில் வாழ்க்கின்ற தமிழ் மக்களிடத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குச் செயற்பட்டதாகத் தெரிவித்த மனோ கணேசன், புதிய அரசாங்கத்தில், தான் ஒருபோதும் அமைச்சுப் பதவியை பொறுப்பேற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன், தான் ஜனாதிபதியாக செயற்படுவது மிகவும் கடினமானதாக உள்ளதென, இந்தச் சந்திப்பின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துரைத்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள மனோ கணேசன், “அது அவருடைய நிலைப்பாடு என்பதால், அதைப்பற்றிப் பிரச்சினையில்லை. எனினும், தன்னால் ஒத்துழைப்பு நல்கி, புதிய அரசாங்கத்தை ஆதரிப்பதென்பது கடினமானது” என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாக இருப்பினும், நாடாளுமன்றம், எதிர்வரும் 14ஆம் திகதியன்று கூடுகின்ற போது, ரணில் விக்கிரமசிங்கவுக்கு தான் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவளிக்கும் என்பதுடன், சபாநாயகர் விடுத்த அறிவிப்பின் பிரகாரம், ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்பு இருந்த நிலைமையைத் தான் இன்றும் ஏற்றுக்கொள்கின்றேன் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
மிகவும் முற்போக்கான கட்சி என்றவகையில், “நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி, எங்களுக்கே நிலைப்பாட்டைக் கூறுகின்றார்” என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாம் எடுத்துள்ள இந்தத் தீர்மானத்தில், எவ்விதமான மாற்றங்களும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படமாட்டாது என்று தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்றத்துக்குள் 120 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணியிடம் உள்ளது என்றும் அவர் கூறினார்.