பிலிப்பைன்ஸின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டே, தனது பதவியைப் பறிகொடுக்கக்கூடிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக, அந்நாட்டின் செனட்டர்கள் இருவர் தெரிவித்துள்ளனர். நாட்டின் போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துகளே, அவர் மீதான இந்த விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
திங்கட்கிழமை (12) கருத்துத் தெரிவித்திருந்த ஜனாதிபதி டுட்டேர்ட்டே, தாவோ நகரின் மேயராக இருந்த போது, மோட்டார் சைக்கிளொன்றில் சென்று, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்களை, தானே நேரடியாகக் கொன்றதாகத் தெரிவித்திருந்தார். சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு முன்மாதிரியாக இருப்பதற்காகவே அவ்வாறு செய்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாண்டு ஜூலையில் ஜனாதிபதியாக டுட்டேர்ட்டே பதவியேற்ற பின்னர், போதைப்பொருளுக்கெதிரான யுத்தத்தில், 2,000க்கும் மேற்பட்டோர், பொலிஸாரால் கொல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்படுவதை எதிர்த்தமைக்காகவே அவர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களுக்கு மேலதிகமாக, 3,000 மரணங்கள் குறிததும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஜனாதிபதியின் அங்கிகாரத்துடனேயே இந்த மரணங்கள் ஏற்படுத்தப்பட்டன என, அவரின் விமர்சகர்களும் மனித உரிமைகள் செயற்பட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த செனட்டரான லெல்லா டி லீமா, “அது, பொதுமக்களின் நம்பிக்கையை ஏமாற்றுதல் என்பதோடு, அதிக படுகொலைகள், உயர் குற்றங்களின் கீழ் வருகின்றன. உயர் குற்றங்கள் மூலம், அரசியல் குற்றச்சாட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட முடியும்” என்றார். செனட்டின் நீதிச் செயற்குழுவுக்குத் தலைமை தாங்கும் செனட்டரான றிச்சர்ட் கோர்டனும், ஜனாதிபதியின் பதவிக்கான ஆபத்து ஏற்படக்கூடும் என்பதை ஏற்றுக் கொண்டார்.
எனினும், 293 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில், 50க்கும் குறைவான எதிர்க்கட்சி உறுப்பினர்களே உள்ளனர். ஜனாதிபதியைப் பதவி விலக்க வேண்டுமாயின், மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையென்பது குறிப்பிடத்தக்கது.