தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள், இலங்கை அரசாங்கத்தால் காலவரையறை குறிப்பிடப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்ற வாசகம், புதிய தீர்மானத்தின் முன்னுரையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ஏனைய விடயங்கள் அனைத்தும், முன்னைய தீர்மானத்தின் உள்ளடக்கங்களாகவே காணப்படுகின்றன.
பிரிட்டன், கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மொன்ரிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து முன்வைத்த இந்தத் தீர்மானத்துக்கு, திருத்தங்களின்றி இணை அனுசரணை வழங்குவதற்கு, இலங்கை அரசாங்கம், இறுதி நேரத்தில் இணங்கிக்கொண்டது.
இதற்கான தீர்மான முன்வரைவு, “இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்” எனும் தலைப்பில் முன்வைக்கப்பட்டது.
இதற்கமைய, 2015ஆம் ஆண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கை அரசாங்கம் மீதான ஐ.நாவின் கண்காணிப்பு, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால், அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்தில், 2021 மார்ச் மாதம், விரிவாக அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரது விரிவான அறிக்கையுடன், பேரவையில் விவாதம் ஒன்று நடத்தப்படும் என்றும், தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த, இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டும் இந்தத் தீர்மானத்தில், 30/1 தீர்மானம், முழுமையான நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெனீவா நேரப்படி, நேற்றுப் பிற்பகல், புதிய தீர்மான வரைவு மீது விவாதம் நடத்தப்பட்டது. இதில், பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு உரையாற்றினர். இதனையடுத்து, இலங்கையின் சார்பில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த, எந்தவொரு நாடும் கோராத நிலையில், ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.