இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் முடிவை, தமது நாட்டுக்குக் கிடைத்த அறை எனக் குறிப்பிட்டுள்ள பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ், இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பான மத்தியஸ்தத்தில், ஐ.அமெரிக்கா தனித்துச் செயற்படுவதை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.
ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் முடிவு, இஸ்ரேலை மகிழ்ச்சிக்குட்படுத்தியுள்ள போதிலும், பலஸ்தீனத்திலும் சர்வதேச மட்டத்திலும், கடுமையான கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பலஸ்தீனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளைச் சந்தித்த பலஸ்தீன ஜனாதிபதி, அங்கு, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினையைத் தீர்த்து, இணக்கமொன்றைக் காண்பதே தனது நோக்கமெனக் குறிப்பிடும் ஜனாதிபதி ட்ரம்ப், அவ்வாறான ஓர் இணக்கப்பாட்டை, “நூற்றாண்டின் ஒப்பந்தம்” என வர்ணிப்பதோடு, இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரித்தமை, அவ்வொப்பந்தத்துக்குச் சாதகமானது எனக் குறிப்பிடுகிறார்.
அதைக் குறிப்பிட்டுப் பேசிய பலஸ்தீன ஜனாதிபதி, “நூற்றாண்டின் ஒப்பந்தம், உண்மையில் நூற்றாண்டின் அறை. அதை நாங்கள் திருப்பிக் கொடுப்போம்” என்று தெரிவித்ததோடு, மத்தியஸ்தத்தில் ஐ.அமெரிக்காவை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
மாறாக, நான்கு அல்லது ஐந்து நாடுகள் அல்லது தரப்புகள் இணைந்த, சர்வதேசக் கூட்டமாக அது இருக்க வேண்டுமெனக் குறிப்பிட்ட அவர், ஐ.அமெரிக்காவை, தனியாக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், “ஐ.அமெரிக்கா, எங்கள் மீது திணிக்க முயல்கின்ற எதையும் நாங்கள் ஏற்கப் போவதில்லை. அந்தக் குற்றத்தின் பின் (இஸ்ரேலின் தலைநராக ஜெருசலேத்தை அங்கிகரித்தமை), மத்தியஸ்தத்தில் நாங்கள் ஐ.அமெரிக்காவை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.
ஏற்கெனவே, எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்ய, ஐ.அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் திட்டமிட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப்பின் முடிவைத் தொடர்ந்து, அவரைச் சந்திக்கப் போவதில்லை என, பலஸ்தீனம் அறிவித்திருந்தது. இதனால், உப ஜனாதிபதி பென்ஸின் விஜயத்திலிருந்து, பலஸ்தீனம் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.