ஜே.வி.பி. முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க 74 வது வயதில் காலமானார். “ஜேவிபி யின் முள்ளிவாய்க்கால்” என்று சொல்லக் கூடிய, 1989 – 1991 படுகொலைகளில் இருந்து உயிர் தப்பி இந்தியா சென்று, பின்னர் அங்கிருந்து பிரிட்டன் சென்று அகதித் தஞ்சம் கோரி இருந்தார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில், ஜே.வி.பி. முற்றாக அழித்தொழிக்கப் பட்ட நிலையில், உதிரிகளாக இருந்த கட்சி உறுப்பினர்களையும், ஆதரவாளர்களையும் ஒன்றிணைத்து கட்சியை மீண்டும் கட்டியெழுப்பியதில், சோமவன்சவின் பங்கு கணிசமான அளவு இருந்துள்ளது.
இருப்பினும், பாராளுமன்ற சாக்கடை அரசியலுக்குள் அமிழ்ந்து போனதால், கட்சியை வலதுசாரிப் பாதையில் வழி நடத்தியதில் சோமவன்ச அமரசிங்கவின் தலைமைப் பாத்திரம் இருந்துள்ளது. தேர்தல் காலங்களில் பிற வலதுசாரிக் கட்சிகள் போன்று, ஜே.வி.பி.யும் இனவாதம் பேசி வாக்கு வேட்டையாடியதை மறைக்க முடியாது.
சோமவன்ச அமரசிங்க தலைமையிலிருந்த காலத்தில், ஜேவிபி ராஜபக்ச அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்தது. இதனால் ஆதாயமடைந்த மகிந்த ராஜ்பக்ச, அதற்கு “நன்றிக் கடனாக” ஜேவிபி யில் இருந்த விமல் வீரவன்ச தலைமையிலான தீவிர வலதுசாரிகளை பிரித்தெடுத்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
சோமவன்ச அமரசிங்கவின் வலதுசாரி சந்தர்ப்பவாத அரசியல் அவருக்கும் கட்சிக்கும் எந்த நன்மையையும் உண்டாக்கவில்லை. கட்சி இரண்டாகப் பிளவு பட்டு, தீவிர இடதுசாரிகள் குமார் குணரட்னம் தலைமையில் பிரிந்து சென்றனர். இரண்டு பிரிவினருக்கும் இடையிலான முரண்பாடுகள், சில நேரம் வன்முறையிலும் முடிந்துள்ளன.
இறுதியில் சோமவன்ச அமரசிங்கவின் தலைமையில் அதிருப்தியுற்ற ஜேவிபி மத்திய குழு உறுப்பினர்கள் அவரை பதவியிறக்கினார்கள். அதற்குப் பிறகு, சோமவன்ச அமர சிங்க தனியாக ஒரு “பௌத்த – தேசியவாத” கட்சியை உருவாக்க முனைந்து தோல்வியுற்றார்.
(Tharmalingam Kalaiyarasan)