தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினராக கருதப்படும் அன்டனி எமில்காந்தனை கைதுசெய்யும் வகையில் கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் மீண்டும் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளது. 1998 களுத்துறை பகுதியில் வைத்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கூரிய ஆயுததால் தாக்கி கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பிலே அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி எமில்காந்தன் நீதிமன்றத்தில் சரண் அடையத் தயாராக உள்ளதாக எமில்காந்தன் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் குறிப்பிட்டனர். எனவே எமில்காந்தனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவை இரத்துச் செய்ய வேண்டும் என அவரின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு விசேட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிடியாணை உத்தரவின் மீதான தடையை நீடிக்க வேண்டும் என எமில்காந்தனின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தனர். எனினும் இந்த கோரிக்கைக்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு வெளியிட்டதுடன், தேவையான கால அவகாசம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். திறந்த பிடியாணை மீதான தடையை நீடிக்கும் தீர்மானம், எமில்காந்தன் போன்ற சந்தேகநபர்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் அமையும் என அரச தரப்பு சட்டத்தரணி சுட்டிக்காட்டினார். அரச தரப்பு சட்டத்தரணியின் வாதத்தை ஏற்றுக்கொண்ட கொழும்பு விசேட மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா, எமில்காந்தனுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீதான தடையை இரத்துச் செய்தார். இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.