டனிஸ் அலிக்கு விளக்கமறியல்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, நேற்று (26) மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை, நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஓகஸ்ட் 1ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

டுபாய் நோக்கி நேற்று புறப்பட இருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்ட்டார்.

அதன் போது, பயணிகள் அதிர்ச்சியடைந்ததுடன், அது குறித்த வீடியோவை வெளியிட்டு தங்களது அதிருப்தியையும் வெளியிட்டிருந்தனர்.

தான், நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என்றும், சர்வதேச சமூகத்துக்கு போராட்ட எதிர்ப்புச் செய்தியை எடுத்துச் செல்வதற்காகவும் ஐ.நா.விடம் வழக்கை முன்வைப்பதற்காகவும் வெளிநாட்டுக்கு பயணிப்பதாக டனிஸ் அலி குறிப்பிட்டார்.

தலைமுடியை வெட்டி மற்றும் தாடியை சவரம் செய்திருந்தமை குறித்து வினவியபோது, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கோரிக்கைக்கு அமையவே அவ்வாறு செய்ததாக டனிஸ் தெரிவித்தார்.

ஜூலை 13 ஆம் திகதி இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை, நேரடி ஒளிபரப்புக்கு அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பை சிறிது நேரம் இடைநிறுத்த வற்புறுத்தியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது குறித்த மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த டனிஸ் அலியை இன்று மாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.