போரால் சீரழிந்த காசா தற்போது எப்படி உள்ளதோ, அதுபோன்ற காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. ஆனால், கடற்கரையருகே நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள், தெருக்களில் சொகுசு கார்கள், எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற தனித்துவம் வாய்ந்த உருவம் கொண்ட உயர்ந்த கட்டிடம் என நகரம் உருமாற்றம் பெற்று காண்பிக்கப்பட்டுள்ளது.
வீடியோவில் காசாவின் ஆடம்பர தோற்றங்கள் காட்டப்பட்டுள்ளன. வான்வரை உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள், பரபரப்பாக செயற்படும் சந்தைகள், கடற்கரைகள் என ஆடம்பர வாழ்க்கையை பிரதிபலிக்கும் அம்சங்கள் இடம் பெற்று உள்ளன. பனைமரங்களால் சூழப்பட்ட டிரம்ப்பின் பெரிய உருவ சிலை ஒன்றும் காணப்படுகிறது. அதன் பின்னணியில் சூரியன் மறையும் காட்சிகளும் உள்ளன.
புதிய காசாவில் டிரம்ப்பின் நெருங்கிய நண்பரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். கடற்கரையில், புன்னகைத்தபடி மஸ்க் தன்னுடைய உணவை சாப்பிடுகிறார். தாடி வைத்த நடன கலைஞர்கள் விருந்தினர்களை மகிழ்விக்கின்றனர்.
கடற்கரையில் இருந்து சற்று தொலைவில், குழந்தை ஒன்று சந்தை பகுதியில், டிரம்ப் பலூன் ஒன்றை பிடித்தபடி காணப்படுகிறது. இரவு விடுதி ஒன்றில், நடன பெண்மணியுடன் டிரம்ப் இருப்பது போன்றும், மஸ்க் கடற்கரையில் பணமழை பொழியும் காட்சிகளும் உள்ளன.
நகரின் நடுவே, யார் தலைவன் என காட்டும் வகையில், டிரம்ப் காசா என்ற பெயருடன் உயர்ந்து நிற்கும் கட்டிடம் ஒன்றும் உள்ளது. இறுதியாக, டிரம்ப் மற்றும் நெதன்யாகு இருவரும் நீர்நிலை ஒன்றின் அருகே கோடை வெயிலை தணிக்கும் வகையில் டிரவுசர் அணிந்தபடி தளர்வாக படுத்திருக்கின்றனர்.