” எளியமக்களின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தோம் . அதற்கான அனைத்து கணக்கீடுகளையும் போட்டோம். இப்போது திட்டத்தையும் உருவாக்கிவிட்டோம்…”
செய்தியாளர்கள்
பரபரத்தார்கள்.
” ஏழைமக்களுக்கான
குறைந்தபட்ச வருமானத் திட்டம் !
காங்கிரஸ் ஆட்சிக்குவந்ததும் உடனே செயல்படுத்தப்படப்போகும் திட்டம்!
இந்தத் திட்டத்தின்படி….
நாட்டில் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு
72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அதாவது மாதம் 6000 ரூபாய் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள்….”
சொன்ன செய்தி ஒருபக்கம்
‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே ‘
என்று இருந்தாலும் – மறுபக்கம் ‘திக்’கென்றிருந்தது.
மோடி நியாபகம் வந்தது ….
அந்த பதினஞ்சு லட்சம்….
அப்படி சந்தேகம் வந்துவிடக்கூடாது
என்பதற்காக போலும்.
ராகுல் சொன்னார் :
” இது தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசித்து, கலந்தாய்வு செய்து அவர்களின் ஆலோசனைக்குப் பின்பே இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக பெரும் சிரமப்பட்டு வரும் இந்திய மக்களுக்கு நீதி வழங்க விரும்புகிறோம்……”
‘ நானா? சொல்லவே இல்லியே?
எங்க ? எப்ப ? யார்கிட்ட?
நீ பாத்தியா? ‘ என்றெல்லாம்
பாஜக மாதிரி அந்தர் பல்ட்டி அடிக்கமாட்டார்
என்று என்ன நிச்சயம்?
அடிக்கத்தேவையில்லை என்கின்றன
அவரது முத்தாய்ப்பு வரிகள்….
” உலகிலேயே இந்தத் திட்டம் போன்று
வேறு எந்தத் திட்டமும் இல்லை.
இந்தத் திட்டம் வலிமையானது, சாத்தியமானது. மிகவும் சிந்தித்து,
நிதானமாக எடுக்கப்பட்ட முடிவு இது…”
என்று உறுதி சொன்னவர் –
” ஏழ்மையின் மீதான கடைசிகட்டத்
தாக்குதல் தொடங்கி இருக்கிறது.
இந்த தேசத்தில் இருந்து வறுமையை
நாங்கள் ஒழிப்போம்….”
என்று ஓங்கி ஒலித்திருக்கிறார் .
“கடந்த சட்டமன்றத் தேர்தல்களில்
காங்கிரஸ் வென்றால்
விவசாயக்கடன்களை ரத்து செய்வோம்
என்று வாக்குறுதி அளித்தோம்.
வந்ததும் முதல் வேலையாக
விவசாயக் கடன்களை முழுவதையும்
ரத்து செய்தோமா இல்லையா?
அதேபோல இதையும்
நிச்சயம் செய்துகாட்டுவோம்….”
அதிரடிதான்!
அருண் ஜெட்லீ ஏதும் அபசகுனம் பேசும்முன் –
யாராவது தெரிந்த காங்கிரஸ்காரர்கள் கருத்தைக் கேட்டாகவேண்டுமென்று – சூட்டோடு சூடாக –
சத்யமூர்த்தி பவன் பக்கம் போனேன்.
மகிளா காங்கிரஸ் வக்கீல் தோழி எதிர்ப்பட்டார்.
இஸ்கப் மாநாட்டுக்கப்புறம் இப்போதுதான் பார்க்கிறேன்.
‘பப்பு’ வேகுமா என்றேன்.
“பருப்பு வேகாது என்பவர்களுக்கு –
சாம்பார் வைத்துக்காட்டுவார்
எங்கள் ராகுல்!”
என்றாரே பார்க்கலாம்.
” இதே உற்சாகத்தோடு
தொகுதிக்குள் போங்கள்.
இப்போதைக்கு ஒரு இஞ்சி டீ
சாப்பிடுவோம் வாங்கள்…”
-என்றேன்.
(Rathan Chandrasekar)