இதற்கு ‘சைட்டோகைன் ஸ்ட்ரோம் சிண்ட்ரோம்’ (சி.எஸ்.எஸ்.) என்று பெயர். சைட்டோகைன்கள் என்பவை செல்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை புரதங்கள். உடலில் ஒரு இடத்தில் அடிபட்டு வீங்கினாலோ, நோய்த் தொற்று ஏற்பட்டாலோ சைட்டோகைன்கள் சுரக்கும். இது போதுமான அளவுக்கு சுரந்தால் நல்லது. அளவுக்கு மீறினால் ஆபத்துதான். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளம் நோயாளிகளின் நுரையீரலுக்கு இந்த சைட்டோகைன்கள் அதிக அளவில் சென்று, நோய்க்கிருமிகளுடன் போராடாமல் நுரையீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதைத் தொடர்ந்து நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசிக்க முடியாமல்போகிறது. முன்னதாக 1918-ல் உலகெங்கும் 5 கோடிப் பேருக்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற ஸ்பானிஷ் ஃப்ளூவின் ஆட்டத்திலும் சைட்டோகைன் முக்கிய இடம் வகித்தது நினைவுகூரத்தக்கதாகும்.
ஊரடங்கில் சுற்றும் பிரெஞ்சுக்காரர்கள்
இந்தியாவில் மட்டும் இல்லை; பல நாடுகளிலும் மக்களை வீட்டுக்குள் வைக்க அரசாங்கங்கள் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிரான்ஸில் வழக்கமாக ஈஸ்டர் பண்டிகையையொட்டிய இரு வார விடுமுறைக் காலத்தில் சுற்றுலா செல்வது அந்நாட்டினருக்கு வழக்கம். இப்போது பிரான்ஸில் ஊரடங்கு அமலில் இருக்கிற நிலையில், ஈஸ்டர் பருவம் கடந்த வாரம் தொடங்கியது. பேருந்து, ரயில், விமான சேவைகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுவிட்டாலும், மக்கள் அடங்கவில்லை. சொந்த கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக சுற்றுலா புறப்பட்டுவிட்டனர். ராணுவமும் காவல் துறையும் கெஞ்சிக் கூத்தாடி மக்களை வீட்டுக்குத் திரும்ப அனுப்பியிருக்கிறார்கள். இப்படித் திரும்ப அனுப்பப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 58 லட்சம்! இவர்களில் 3.59 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ‘நீங்கள் விடுமுறையை விரும்பலாம்; கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது; வீட்டுக்குள்ளேயே இருங்கள்’ என்று தொலைக்காட்சியில் மக்களிடம் மன்றாடியிருக்கிறார் பிரதமர் எட்வர் ஃபிலிப். பிரச்சினையின் தீவிரத்தை மக்கள் உணர வேண்டும்!
ட்ரம்பின் அடுத்த அதிபர் கனவுக்கு ஆபத்து!
கரோனாவால் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்; உலக அளவில் இன்று அதுதான் முதலிடத்தில் இருக்கிறது. அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியமான நடவடிக்கைகள்தான் இதற்குக் காரணம் என்ற விமர்சனம் இன்று அமெரிக்கர்கள் மத்தியில் தீவிரமாக உருவாகிவருகிறது. சீனாவின் வூஹான் நகரில் கரோனா பரவல் உறுதியான பிறகேகூட சீனாவிலிருந்து 1,700 முறை விமானப் பயணங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன; 4.3 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பயணித்திருக்கிறார்கள். இவர்களில் பல்லாயிரக் கணக்கானோர் வூஹானிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு அமெரிக்க விமான நிலையங்களில் முறையான பரிசோதனைகள் செய்யப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் ட்ரம்ப் அரசின் அலட்சியம்தான் என்கிற குரல்கள் ட்ரம்ப் அடுத்த முறை அதிபராகும் கனவைக் குலைத்துவிடும் என்கிறார்கள்.
(The Hindu tamil)