அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விமான நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நாட்டிலுள்ள எரிபொருள் சேமிப்பக செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
விமானங்களுக்கான எரிபொருளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு மாத்திரமே இதுவரையில் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க டொலர் நெருக்கடியால் நாட்டுக்கு விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இவ்விடயத்தைக் கருத்திற்கொண்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கையில் விமான எரிபொருள் சேமிப்பு பலவீனமடைந்துள்ளதால் சில விமான நிறுவனங்கள் ஏற்கெனவே இலங்கைக்கான விமான சேவைகளை குறைத்துள்ளதாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விமானங்களின் வருகை மேலும் குறைக்கப்பட்டால், சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்கு செல்வோரை கடுமையாக பாதிக்கும் என்பதால் தற்போதுள்ள சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்தச் சட்டங்களைத் திருத்துவதற்கு கால அவகாசம் எடுக்கும் என்பதால், அரசாங்கத்தின் கொள்கை தீர்மானமாக குறுகிய காலத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரத்துடன் தனியார் துறைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அமைச்சர் தீர்மானித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் விமான சேவைகள் அதிகாரசபை இந்த நடவடிக்கைக்கு பூரண ஆதரவை வழங்குமாறு அமைச்சர் பணிப்புரை விடுத்ததுடன், சுங்கத் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களும் தமது ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.