நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்களும், 17ஆம் திகதி கைது செய்யப்பட்ட 21 கடற்தொழிலாளர்களினதும் வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் புதன்கிழமை (27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் போது , 36 தமிழக கடற்தொழிலாளர்களும் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதையடுத்து அவர்களில் இரண்டு படகோட்டிகளுக்கு 06 மாத சிறைத்தண்டனையும் மற்றுமொரு கடற்தொழிலாளிக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் , அத்துமீறி நுழைந்தமையால் ,அவருக்கு 1 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
அத்துடன் ஏனைய 33 கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அதனை 05 வருடங்களுக்கு ஒத்திவைத்த நீதவான் , கைப்பற்றப்பட்ட படகுகளில் ஒரு படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டவர்களுக்குள் இருந்தமையால் , குறித்த படகினை அரசுடைமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
மேலும் ஏனைய இரு படகுகளுக்கான விசாரணை தொடர்பில் வழக்கு திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .