(அதிரன்)
வடக்கு கிழக்கு இணைப்புத் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவுமே அந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியொன்றில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அதற்கு அவர் வழங்கிய பதில்களையும் இங்கு இணைக்கிறோம்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென ஜனாதிபதி கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் ஆதரவுடன்தான் மீண்டும் நீங்கள் ஆட்சிக்கு வர முடியுமென்றால் என்ன செய்வீர்கள்?
வடக்கு – கிழக்கு இணைப்பைப் பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர பிற கட்சிகள் எதுவும் அந்தக் கோரிக்கையை விடுக்கவில்லை. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால், அதற்கு சரியான நபர் எதிர்க்கட்சித் தலைவர்தான். அவர்தான் ஜனாதிபதியோடு இது தொடர்பாக நீண்ட விவாதங்களை நடத்தியிருக்கிறார். மாகாண கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென அவரது கட்சி கோரியிருக்கிறது.
காவல் மற்றும் நில அதிகாரங்கள் கொடுக்கப்பட வாய்ப்புள்ளதா?
வெவ்வேறு கட்சிகள் வெவ்வேறு விதமான ஆலோசனைகளை முன்வைக்கிறார்கள். இம்மாதிரியான ஒரு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக நிபுணர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.
காவல் மற்றும் நில அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கும் யோசனை உங்களுக்கு ஏற்புடையதா?
காவல் மற்றும் நில அதிகாரங்களை விடுங்கள்.. கூடுதலாக என்ன அதிகாரங்களை மாகாணங்களுக்கு அளிக்கலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம். சில அதிகாரங்களை அளிக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதற்கு ஒப்புக்கொண்டுள்ளது.
காவல்துறை அதிகாரத்தையுமா?
பல கட்சிகள் இருக்கின்றன. யாரும் ஒரு உடன்பாட்டுக்கு வர மறுக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி உள்பட பல கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை அரசியல் சாஸன அவையின் வழிநடத்தும் குழுவிடம் அளித்துள்ளன. பார்க்கலாம்.
தற்போதைய குழப்பத்திற்கு நடுவில், புதிய அரசியல்சாஸனத்தை உருவாக்கும் முயற்சிகள் என்னவாகும்?
எனக்குத் தெரியவில்லை. முதலில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். தற்போது எல்லாமே நின்றுபோயிருக்கிறது. இந்தச் சிக்கலைத்தான் முதலில் தீர்க்க வேண்டும்.