எதிர்வரும் இருமாதங்களில் கட்சியின் குறித்த இரண்டாவது காங்கிரஸை (மாநாட்டை) திருகோணமலையில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கட்சியின் பொதுச் செயலாளர் க. சிவராசா (மோகன்) தெரிவித்தார்.
கட்சியின் நடைபெறவுள்ள இரண்டாவது காங்கிரசுக்கு முன்னோடியாக கட்சியின் பிராந்திய மாநாடுகளை நடத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி முதலாவது பிராந்திய மாநாடு அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.
பாண்டிருப்பு 2ஆம் பிரிவிலுள்ள தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலயத்தில் அமைப்பாளர் சலீம் பிர்தௌஸ் தலைமையில் குறித்த பிராந்திய மாநாடு நடைபெற்றது.
அம்பாறை பிராந்தியத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த கட்சி முக்கியஸ்த்தர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த பிராந்திய மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் க. சிவராசா (மோகன்), காங்கிரஸ் ஏற்பாடுக்கு குழச் செயலாளர் கிருபாவிக்னேஸ்வரன் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
அத்துடன் பிராந்திய முக்கியஸ்த்தர்களான தோழர்கள், ஊடக செயலாளர் சசி ஆலோசகர் டேவிட், நிதி செயலாளர் சேனாதிராசா, ஏற்பாட்டாளர் ரஞ்சித் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கட்சியின் காங்கிரசுக்கு முன்னோடியான முதலாவது பிராந்திய மாநாடு இதுவெனக் குறிப்பிட்ட பொதுச் செயலாளர் சிவராசா தொடர்ந்து வன்னி, யாழ்ப்பாணம், உட்பட மற்றும் பிராந்திய மாநாடுகளை நடத்தவுள்ளதாக மாநாட்டில் உரையாற்றும் போது குறிப்பிட்டார்.
குறித்த பிராந்தியங்களில் மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள், கட்சி மற்றும் அரசியல் தொடர்பான ஆலோசனைகள், கட்சி அமைப்பு விதிகள் தொடர்பிலான திருத்த ஆலோசனைகள் என்பன தொடர்பில் ஆராய்ந்து முன்மொழிவுகளை பிராந்திய கிளைகள் விரைவில் தலைமைப்பீடத்திற்கு முன்மொழிவுகளாகச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் அவர் மேலும் உரையாற்றுகையில் கூறினார்.
இதேவேளை தவிர்க்க முடியாத காரணத்தினல் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன் (சுகு) இந்த பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ளவில்லையெனினும் அவரது மாநாட்டுக்கான விசேட செய்தி மாநாட்டில் வாசிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)