போர்க் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டவர்களை, அரசியல் கைதிகளுடன் இணைத்து, பொதுமன்னிப்பு என்ற யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகளில் முன்வைப்பாராயின், அந்த யோசனையை தமிழர் தரப்பு, அடியோடு நிராகரிப்பதாகத் தெரிவித்த, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), போர்க் குற்ற விசாரணை நடைபெற்று, நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களுடையதும் கூட்டமைப்பினதும் கோரிக்கையாகும் எனவும் தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான டெலோவின் செயற்குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு அருகிலுள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளரும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில், நேற்று (24) இடம்பெற்றது.
இதன்போது உரையாற்றிய, அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி என். சிறீகாந்தா, ஐ.நாவின் ஜனாதிபதி ஆற்றுவார் என எதிர்பார்க்கப்படும் உரை தொடர்பான விமர்சனத்தை, இவ்வாறு வெளியிட்டார்.
ஜனாதிபதியின் அவ்வாறான அறிவிப்பு, தமிழர் தரப்புக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகின்றது எனத் தெரிவித்த அவர், ஆகவே அந்த விடயம் குறித்து, தமது நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த வேண்டியதொரு தேவை ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
“ஜனாதிபதி மைத்திரியின் இந்த அறிவிப்பு என்பது, போர்க் குற்றச்சாட்டுகளிலிருந்து இலங்கையை விடுவிப்பதுடன், போர்க்குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு என்ற அடிப்படையில் அவரது யோசனை அமையவுள்ளதென எதிர்பார்க்கப்படுகின்றது.
“ஆனால் எங்களுடைய கட்சியும் சரி, நாங்கள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில், முழுமையானதொரு விசாரணை இடம்பெற வேண்டுமென்பதில் உறுதியாகவே இருக்கின்றோம். அத்தோடு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம்” என்று, அவர் குறிப்பிட்டார்.
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான இவ்விடயத்தில், எந்தவொரு சமரத்துக்கும் செல்லப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகவும் உள்ளது எனக் குறிப்பிட்ட அவர், “இதனை நாங்கள், கூட்டமைப்பின் சார்பிலேயே தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, இதனை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது தான், தன்மானமுள்ள ஒவ்வவொரு தமிழர் தரப்பினது நிலைப்பாடு என்பது மட்டுமல்ல, கோரிக்கையாகவும் இருக்கின்றது” என்றும் தெரிவித்தார்.